போலி குற்றச்சாட்டை சுமத்துகிறது இந்தியா: பாகிஸ்தான்

உரி தாக்குதலில் தங்கள் நாட்டின் மீது திட்டமிட்ட போலி குற்றச்சாட்டை இந்திய தலைமை பரப்பி வருகிறது என பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: உரி தாக்குதலில் தங்கள் நாட்டின் மீது திட்டமிட்ட போலி குற்றச்சாட்டை இந்திய தலைமை பரப்பி வருகிறது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற பிரமாண்ட பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆசியாவில் உள்ள ஒரு நாடு (பாகிஸ்தான்), பயங்கரவாதத்தை உலகின் பிற நாடுகளுக்கு பரப்புவதை லட்சியமாகக் கொண்டு செயல்படுகிறது. 21-ஆம் நூற்றாண்டு, ஆசியாவின் நூற்றாண்டாக அமைந்து விடக் கூடாது என்பதை உறுதி செய்யும் திட்டத்துடன் அந்நாடு செயல்பட்டு வருகிறது. பயங்கரவாதத் தாக்குதல் எங்கு நடைபெற்றாலும், அதற்கு குறிப்பிட்ட ஒரு நாட்டையே (பாகிஸ்தான்) அனைத்து நாடுகளும் சுட்டிக்காட்டுகின்றன.

மானுடப் பண்புக்கு பயங்கரவாதம், மிகப்பெரிய எதிரியாகும். எனவே, உலகம் முழுவதும் இருக்கும் மனிதநேயவாதிகள், பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்று சேர வேண்டும்; பயங்கரவாதத்தை ஒருமித்த குரலில் கண்டிக்க வேண்டும்.

காஷ்மீரைப் பிரிக்க நினைக்கும் பயங்கரவாதிகள் எழுதிக் கொடுக்கும் அறிக்கைகளை நமது அண்டை நாட்டுத் தலைவர்கள் வாசிக்கின்றனர். அத்தகைய தலைவர்களுடன் பேசுவதால் பயன் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே இன்றுமுதல், பாகிஸ்தான் மக்களுடன் நான் நேரடியாக பேசப்போகிறேன்.

இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாகவே சுதந்திரம் பெற்றன. இந்தியா மென்பொருளையும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தையும் ஏற்றுமதி செய்கிறது, ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது. இதுகுறித்து தங்கள் நாட்டுத் தலைவர்களிடம் பாகிஸ்தான் மக்கள் கேட்க வேண்டும்.

பாகிஸ்தானுடன் சண்டையிட இந்தியாவுக்கும் விருப்பம்தான். ஆனால் அந்தச் சண்டை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? உங்களுக்கு துணிச்சல் இருந்தால், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், எழுத்தறிவின்மை ஆகியவற்றுக்கு முடிவு கட்டுவதற்கு ஏன் நீங்கள் சண்டையிடக் கூடாது. அப்போது, வெற்றி இந்தியாவுக்கு சொந்தமாகிறதா? பாகிஸ்தானுக்கு சொந்தமாகிறதா? என்பதை நாம் பார்க்கலாம் எனப் பேசியிருந்தார் நரேந்திர மோடி.

இந்நிலையில், இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், வெறுப்பை தூண்டும் அறிக்கைகள் மூலம் திட்டமிட்ட பிரச்சாரத்தை பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தலைமை பரப்பி வருகிறது. கடந்த இரு மாதங்களுக்கு மேலாக காஷ்மீர் அப்பாவி பொதுமக்கள் மீது, பெண்கள், குழந்தைகள் மீது இந்திய ராணுவம் கட்டவிழ்த்து வரும் வன்முறைகள் மீதான சர்வதேச கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாகவே இந்தியா இதுபோன்ற போலி குற்றச்சாட்டை பாகிஸ்தான் மீது சுமத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com