சிறைகளில் உயிரிழந்த கைதிகள் குறித்த விசாரணை அறிக்கை: அரசுக்கு 2 மாத அவகாசம் வழங்கி உத்தரவு

சிறைகளில் உயிரிழந்த கைதிகள் குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, இரண்டு மாதம் கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சிறைகளில் உயிரிழந்த கைதிகள் குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, இரண்டு மாதம் கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சிறைகளிலுள்ள தண்டனை, விசாரணை கைதிகளுக்கு அதிகாரிகள் முறையான மருத்துவ வசதிகள் செய்து கொடுப்பதில்லை. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் கடந்த 2000 முதல் 2013-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 1095  சிறைக் கைதிகள் மர்மமான முறையிலும், உடல் நலம் பாதிப்புக்குள்ளாகியும் உயிரிழந்துள்ளனர்.

ஆகையால் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு போதிய மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க உத்தர விட வேண்டும். மேலும் உயிரிழந்த கைதிகளின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என வழக்குரைஞர் கே.கேசவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் அதன் உறுப்பினர் செயலாளர் டீக்காராமன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், கடந்த 21-ஆம் தேதி நிலவரப்படி, சிறைகளில் உயிரிழந்த 264 கைதிகளில், 198 பேரின் மரணம் தொடர்பான அறிக்கை பெறப்பட்டு விட்டதாகவும், 66 கைதிகளின் மரணம் குறி்த்த விசாரணை நிலுவையில் உள்ளதாகவும், இதில் 40 விசாரணைக் கைகதிகள் குறித்து பொதுத்துறையும், 26 தண்டனைக் கைதிகள் குறித்து உள்துறையும் விசாரித்து வருகிறது.

இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்கு, இன்னும் இரண்டு மாத கால அவகாசம் தேவை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com