பல்கலை. தேர்வுக் கட்டண வசூலில் ரூ.50 கோடி முறைகேடு புகார்: விசாரணை நடத்த ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தல்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் வசூலிப்பதில் ரூ.50 கோடி முறைகேடு நடந்திருப்பதாக ஆட்சிப்பேரவைக் கூட்டத்தில் புகார் கூறிய

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் வசூலிப்பதில் ரூ.50 கோடி முறைகேடு நடந்திருப்பதாக ஆட்சிப்பேரவைக் கூட்டத்தில் புகார் கூறிய உறுப்பினர்கள் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவைக் கூட்டம் பல்கலைக்கழகத்தின் மு.வ.அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சிண்டிகேட் குழு உறுப்பினர் முரளி பக்ஷிராஜன் தலைமை வகித்தார். பதிவாளர் (பொறுப்பு) ஜி.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இதில், பட்ஜெட், ஓய்வூதியப் பிரச்னை, எம்ஃபில், பிஎச்டி ஆராய்ச்சி மாணவர் சேர்க்கை விவகாரம் உள்ளிட்டவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

கூட்டத்தில் பேராசிரியர் முத்துச்செழியன் பேசியது:
 ஆன்லைன் மூலம் தேர்வுக்கட்டணம் வசூலிக்கப்பட்ட பின் 2015-2016-ஆம் கல்வி ஆண்டில் ரூ.3.50 கோடியாக இருந்த வருவாய், 2016-2017 கல்வி ஆண்டில் ரூ.8.46 கோடியாக உயர்ந்துள்ளது. ரூ.5 கோடி வருவாய் அதிகரித்துள்ளது. இதனால் தேர்வுக்கட்டணம் வசூல் செய்வதில் முறைகேடு நடந்துள்ளது என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், இந்தக் கணக்குகளின்படி கடந்த பத்து ஆண்டுகளில் தேர்வுக் கட்டணம் வசூலிப்பதில் ரூ.50 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதை விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைப்பது அவசியம் என்றார்.

இதைத்தொடர்ந்து ஆட்சிப்பேரவை உறுப்பினர் நேரு கூறுகையில், முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் பொறுப்பு வகித்த துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் விசாரணை நடத்தப்படுவது அவசியம். இதற்காக பல்கலைக்கழக விதிகளில் திருத்தங்கள் ஏற்படுத்த வேண்டும். யுஜிசி விதிமுறைகளால் நிறைய மாணவர்கள் பாதிக்கப்படுவர். பல்கலைக்கழக இணைவிப்பு கல்லூரிகளில் எம்ஃபில், பிஎச்டி சேர்க்கை தடைபடும். முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது அதன் பின்விளைவுகளை யோசிக்காமல் முடிவெடுப்பது தவறு என்றார். 

இதையடுத்து, எம்எல்ஏ-க்கள் பி.நீதிபதி மற்றும் கே.கதிர்காமு ஆகியோர் பேசுகையில், யுஜிசி விதிமுறை தொடர்பான பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டியது அவசியம். அதேபோல தேர்வுக் கட்டண வசூலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறுவதையும் முறையாக விசாரிக்க வேண்டும் என்றனர்.

ஓய்வூதியர்கள் போராட்டம்
ஓய்வூதியப் பலன்களை முழுமையாக வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்புவதில் ஓய்வூதியர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சிப்பேரவைக் கூட்டம் நடைபெற்ற வாசலில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டம் முடிந்து வெளியே வந்த பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) ஜி.ஆறுமுகத்திடம் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினர்.

இதுகுறித்து ஏப்ரல் 5 ஆம் தேதி பல்கலைக்கழக நிர்வாகிகளுடன் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்தாலோசித்து தீர்வு எடுப்பதாக பதிவாளர் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்டு அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

முன்னதாக ஆட்சிப் பேரவையின் புதிய உறுப்பினர்களாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.கதிர்காமு (பெரியகுளம்), பி.நீதிபதி (உசிலம்பட்டி),பி.மூர்த்தி (மதுரை கிழக்கு), எஸ்.தங்கபாண்டியன் (ராஜபாளையம்) உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளதாக சிண்டிகேட் குழு உறுப்பினர் முரளி பக்ஷிராஜன் தெரிவித்தார்.

     

    தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

    தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

    உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

    Related Stories

    No stories found.
    X
    Dinamani
    www.dinamani.com