ஆர்.கே. நகரில் வசிக்கும் தெலுங்கு வாக்காளர்களை நம்பியே களமிறங்கியுள்ளேன்: லலிதா மோகன்

ஆர் கே நகர் இடைத் தேர்தலில், அங்கு வசிக்கும் தெலுங்கு வாக்காளர்களை நம்பியே களமிறங்கியுள்ளார் லலிதா மோகன் என்ற வேட்பாளர். அவரது வெற்றி வாய்பு குறித்தும் தேர்தலில் போட்டியிடுவதற்கான நோக்கம் குறித்தும் அவர் கூறியிருப்பதாவது: - 

தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி என்ற புதிய கட்சியின் சார்பில், செஸ்போர்டு சின்னத்தில் போட்டியிடும் லலிதா மோகன், சென்னைவாசிதான். ஆர்கே நகருக்கு அருகிலேயே வசிப்பவர். கல்வியாளர். இந்தத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் ஏன் வந்தது... அவரே கூறுகிறார்: -

எங்கள் கட்சி சமீபத்தில்தான் பதிவு செய்யப்பட்டது என்றாலும், பல ஆண்டுகளாக ஒரு அமைப்பாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மக்களை ஒருங்கிணைத்து, அரசியல் சக்தியாக்குவதுதான் எங்கள் நோக்கம்.

முதல் முறையாக ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுகிறேன். எனக்கு இந்தத் தொகுதியின் பிரச்சினைகள் நன்கு தெரியும். இந்த மக்களையும் நான் அறிவேன். இந்தத் தேர்தலில் போட்டியிடும் எனது முதல் நோக்கம், இங்குள்ள குப்பைக் கிடங்கை அகற்றுவதுதான்.

இந்தத் தொகுதிக்கு எதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும், இந்த குப்பைக் கிடங்கை அகற்றினால் போதும். அதுவே பெரிய மிகப் பெரிய நன்மை. இந்த கிடங்கு அமைந்த நாளிலிருந்தே அகற்றப் போராடி வருபவள் நான். என்னைத் தேர்ந்தெடுத்தால் நிச்சயம் நான் இந்த குப்பைக் கிடங்கை அகற்றி, ஆர் கே  நகர் மக்கள் நிம்மதியாக மூச்சுவிட வைப்பேன். 

எனக்குத் தெரிந்து சென்னையிலேயே மோசமான ட்ராஃபிக் நெரிசல் என்றால் அது ஆர்கே நகர் பகுதிகள்தான். இந்தப் பிரச்சினையை நிச்சயம் சரி செய்வேன். ஆர் கே நகரில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள்தான் அதிகம் வசிக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை மேம்பட திட்டங்கள் வைத்துள்ளேன். குறிப்பாக பெண்களுக்கான திட்டங்கள். நான் வந்தால் நிச்சயம் செய்வேன்.

இந்த மக்களிடம் இப்போது என்னென்ன வாக்குறுதிகள் தந்திருக்கிறேனே அவற்றை நூறு சதவீதம் நிறைவேற்றிக் கொடுப்பேன். தொகுதி முழுக்க சுற்றி வந்துவிட்டேன். நான் சந்திக்கும் வாக்காளர்கள் அனைவருமே, என்னை ஆர்வத்துடன் வரவேற்றார்கள். பல தமிழ் வாக்காளர்கள் கூட எங்களுக்கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்தனர். எனவே மிகுந்த நம்பிக்கையுடன் களத்தில் உள்ளேன்," என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com