பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் ராம் ரஹீம் சிங்கிற்கு  ஹரியானா சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி
பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஹரியானா சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெஹ்தீப் சிங் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். 

தேரா சச்சா சௌதா என்ற அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவருக்கு ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் உள்ளனர். இவர் தனது இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2002ல் மொட்டை கடிதத்தில் புகார் வந்தது. அதன் அடிப்படையில் குர்மீத் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், இந்த வழக்கு விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. 

ஹரியானா மாநிலம், பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட தீர்ப்பில், குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். இத் தீர்ப்பைத் தொடர்ந்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல வட மாவட்டங்களில் பெரும் கலவரம் வெடித்தது. போலீஸார் கண்ணீர்ப் புகைக்குண்டு, தடியடி நடத்தி வன்முறையில் ஈடுபட்ட ரஹீமின் ஆதரவாளர்களை விரட்டி அடித்தனர்.

வட மாநிலங்களில் நடைபெற்ற கலவரங்களில் 38 பேர் பலியானார்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குற்றம் சாட்டப்பட்ட குர்மீத்தை கைது செய்து தங்களது கட்டுப்பாட்டில் காவல்துறையினர் கொண்டு வந்தனர். 

இன்று தீர்ப்பு வழங்குவதற்காக, நீதிபதி ஜெகதீப் சிங் ஹெலிகாப்டர் மூலமாக சுனாரியா சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். தீர்ப்பு வழங்குவதற்காக சிறைக்குள் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதனால்,  நீதிமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்பகுதியில் யாரும் நுழையாத வகையில் ஆயிரக்கணக்கான போலீசார்  குவிக்கப்பட்டனர். மேலும், சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஹரியாணா சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெஹ்தீப் சிங் தனது தீர்ப்பில், சாமியார் ராம் ரஹீமுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தார். ராம் ரஹீம் மீதான இந்த வழக்கில் 14 ஆண்டு விசாரணைக்கு பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com