விமானத்தில் இளம் நடிகை சாய்ரா வசீமுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலதிபர் கைது!

தில்லியில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற விமானத்தில் சக பயணியால் தாம் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாக பிரபல பாலிவுட்
விமானத்தில் இளம் நடிகை சாய்ரா வசீமுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலதிபர் கைது!

மும்பை: தில்லியில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற விமானத்தில் சக பயணியால் தாம் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாக பிரபல பாலிவுட் நடிகை சாய்ரா வசீம், மும்பை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக இளம் தொழிலதிபர் விகாஷ் சச்தேவ் (39) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பிரபல நடிகர் அமீர்கான் நடித்து கடந்த ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட ஹிந்திப்படம் ‘தங்கல்’. தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்ட இந்த படத்தில் அறிமுகமானவர் நடிகை சாயிரா வாசிம் (17). சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்ற இவர், ‘சீக்ரட் சூப்பர்ஸ்டார்’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

காஷ்மீரை சேர்ந்த இவர் நேற்று முன்தினம் ‘ஏர் விஸ்டாரா’ என்ற தனியார் விமானம் மூலம் தில்லியில் இருந்து மும்பைக்கு பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் சாயிராவின் பின் இருக்கையில் நடுத்தர வயதை சேர்ந்த ஒரு ஆண் பயணம் செய்தார். அவர், விமானத்தில் இருட்டைப் பயன்படுத்தி தம்மிடம் கால்களால் சீண்டிய நபர் குறித்து கண்ணீருடன் பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். மின் விளக்குகள் எரியாததால் அந்த நபரை படம் எடுக்க இயலவில்லை என்று குறிப்பிட்ட நடிகை, அந்த நபரின் காலை மட்டும் படம் எடுத்து வெளியிட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு மராட்டிய போலீஸ் டி.ஜி.பி., மற்றும் ஏர் விஸ்டாரா விமான நிறுவனத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், மத்திய அரசும் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு ஏர் விஸ்டாரா விமான நிறுவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து அந்த நபர் யார் என்று விஸ்தாரா விமான நிறுவனம் விசாரணையில் ஈடுபட்டது. 

இந்நிலையில், மும்பையில் விகாஸ் என்ற இளம் தொழிலதிபரை கைது செய்த போலீஸார், பாலியல் தொல்லைக்கு ஆளான சாயிரா 18 வயது பூர்த்தியாகதவர் என்பதால் விகாஸ் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு பிரிவு (போஸ்கோ) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவருக்கு இனி விமானத்தில் பறக்கவும் தடை விதிக்கப்படும் என்று விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com