குஜராத், ஹிமாசலில் தாமரை மலர்கிறது.. கை கவிழ்கிறது..?

குஜராத், ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று திங்கள்கிழமை 42 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் காலை
குஜராத், ஹிமாசலில் தாமரை மலர்கிறது.. கை கவிழ்கிறது..?

குஜராத், ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று திங்கள்கிழமை 42 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிமுதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில மணி நேரங்களில் முழுமையான முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், குஜராத்தில் 6-வது முறையாக அரியாசனத்தை கைப்பற்றியது என்ற அறிவிப்பே வெளியாகும் என தற்போது வரை வெளியாகி உள்ள முன்னிலை முடிவுகளை வைத்தே உறுதி செய்துவிடலாம்.   

குஜராத், பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் அந்த மாநில தேர்தல் முடிவு பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு மாநிலங்களிலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பல்வேறு வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. இரு மாநிலங்களிலுமே பாஜக-காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவியது. குஜராத்தில் பாஜகவும், ஹிமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸூம் இப்போது ஆட்சியில் உள்ளன.

முன்னதாக, குஜராத்தில் கடந்த 9 மற்றும் 14-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஹிமாசலப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 

பாஜக-வின் கோட்டை என பேசப்படும் குஜராத்தில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக-வும் அந்தக் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும் பல யுக்திகளை கையாண்டு வாக்குகளை சேகரித்தன. காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியலை எதிர்த்தும், தரம் தாழ்ந்த பேச்சுகளை பாஜக-வும், மதவாதம், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி பாதிப்புகளை மையப்படுத்தி காங்கிரஸ் கட்சியும் பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ஆளும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 52 கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 1,828 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.

குஜராத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 115 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. அங்கு கடந்த 22 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது. குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க இதில் பாதிக்கும் கூடுதலான எம்எல்ஏக்கள் தேவை. எனினும், அனைத்து வாக்குக் கணிப்புகளிலும் கடந்த 22 ஆண்டுகளாக ஆட்சி அரியாசனத்தில் உள்ள பாஜகவே மீண்டும் ஆட்சி அரியாசனத்தில் அமரும் என்று தேர்தலுக்குப் பிந்தைய 10க்கும் மேற்பட்ட கருத்துக் கணிப்புகள் ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளன.

அப்படி அமைந்தால் குஜராத்தில் தொடர்ந்து 6-ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைத்து சாதனை படைக்கும். காங்கிரஸ் வெற்றி பெற்றால் அது ராகுலின் தலைமைக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படும்.

ஹிமாசலப் பிரதேசத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் 36 இடங்களில் வென்று பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது பாஜகவுக்கு 26 இடங்களும், பிற கட்சிகளுக்கு 6 இடங்களும் கிடைத்தன. ஹிமாசலப் பிரதேசத்தில் 68 தொகுதிகளுக்கு நவம்பர் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 338 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில் சுமார் 75.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்கும் கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாகவே இருக்கின்றன. அக்கட்சி வெற்றிபெறும் பட்சத்தில் மூத்த தலைவரான பிரேம் குமார் துமால் முதல்வராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிமாசலப் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றால் அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரிக்கும். அதே நேரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து நான்காக குறைந்துவிடும்.

குஜராத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே முதல்வராக யாரையும் முன்னிறுத்தவில்லை. எனவே, தேர்தல் முடிவுக்குப் பிறகே புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

அதே நேரத்தில் ஹிமாசலப் பிரதேசத்தில் இப்போதைய முதல்வர் வீரபத்ர சிங், காங்கிரஸ் சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ளார். பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் பிரேம்குமார் துமல் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை வெளியாகி உள்ள முன்னிலை முடிவுகள் விவரம்:
குஜராத்(182) 
பாஜக -  107 
காங்கிரஸ் - 74
மற்றவை - 04

ஹிமாசலாப் பிரதேசம்(68)
பாஜக - 40 
காங்கிரஸ் - 22
மற்றவை - 04

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com