3-ஆம் கட்ட பொலிவுறு நகரங்கள் பட்டியலில் புதுச்சேரி இடம்பெற வேண்டும்அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

பொலிவுறு நகரங்கள் செயல்படுத்தப்படும் 3-ஆம் கட்ட பட்டியலில் கட்டாயம் புதுச்சேரி இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார். 

புதுச்சேரி: பொலிவுறு நகரங்கள் செயல்படுத்தப்படும் 3-ஆம் கட்ட பட்டியலில் கட்டாயம் புதுச்சேரி இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

புதுவை உள்ளாட்சி துறை, பிரெஞ்சு தூதரகம், பிரெஞ்சு வளர்ச்சி முகமை ஆகியவை இணைந்து புதுவையில் பொலிவுறு நகரங்கள் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான கருத்தரங்கை புதுவையில் வியாழக்கிழமை நடத்தின. இந்த கருத்தரங்கில் புதுவையில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் இதில் பொலிவுறு நகர திட்டத்தை புதுவையில் செயல்படுத்த ஆர்வம் தெரிவித்துள்ள 16 பிரெஞ்சு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்க தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் நாராயணசாமி பேசியது:

 பொலிவுறு நகரங்கள் திட்டம் பிரதமரால் அறிவிக்கப்பட்டது. அதன்படி தலா ரூ. 1000 கோடியில் 100 நகரங்களை மேம்படுத்தப்படும். புதுவையில் புதிதாக ஒரு நகரத்தை உருவாக்க கடந்த அரசு முயற்சி செய்தது. ஆனால் மத்திய அரசு அதனை ஏற்கவில்லை.

 புதுவையில் ஏற்கனவே பிரெஞ்சு கலாசாரம், கட்டடங்கள் ஆகியவை உள்ளன. அதனால் தற்போதைய அரசு, புதுவை நகரையே மேலும் புனரமைக்க முடிவு செய்து அதற்கான திட்டத்தை தயாரித்து வருகிறது. புதுவையின் மிகப்பெரிய சவாலாக போக்குவரத்து நெரிசல் உள்ளது.

அதேவேளையில் நாம் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடு, தூய்மை ஆகியவற்றில் வெற்றி பெற்றுள்ளோம். புதுவை மின்மிகை மாநிலமாக இருப்பதால் 24 மணிநேரமும் மின்சாரம் கிடைக்கிறது. பாதுகாக்கப்பட்ட குடிநீர், வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதாளச் சாக்கடை திட்டம் பெரும்பாலும் முடிக்கப்பட்டுள்ளது.

 பிரெஞ்சு ஆட்சியில் திட்டமிடலோடு புதுவை நகரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை நாம் அப்படியே மெருகேற்ற வேண்டும். புதுவையில் டிராம் வசதி செய்வதைவிட மின்சார பேருந்து வசதியை ஏற்படுத்தினால் பயன்தரும் என்று கருதுகிறேன். அண்டை மாநிலங்களில் இருந்தும், ஐரோப்பாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

 அதற்காக விமான நிலையத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். தில்லி, புவனேஷ்வர், கன்னியாகுமரி, பெங்களூரு, மங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட பல நகரங்களுக்கு ரயில் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை - புதுவைக்கு விரைவு ரயில் இயக்க மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

 இந்த திட்டத்துக்கு மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற புதுவை அரசு முயற்சிக்கும். அதேவேளையில் மூன்றாவது பொலிவுறு நகரங்கள் பட்டியலில் புதுச்சேரியை கட்டாயம் இடம்பெறச் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 முன்னதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசும்போது, அனைத்து வசதிகளும் இருந்த புதுவை நகரத்தில் தற்போது மக்கள்தொகை அதிகரித்துள்ளதால் வசதிகள் போதவில்லை. மீண்டும் புதுவையை நல்ல முறையில் உருவாக்கி, மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

 கருத்தரங்கில் பிரெஞ்சு தூதரக தெற்காசியாவுக்கான பொருளாதார துறை மண்டல தலைவர் ஜீன் மார்க் ஃபெனே பேசியது: புதுவையை பொலிவுறு நகரமாக மாற்ற 16 பிரெஞ்சு நிறுவனங்கள் பங்களிக்க முன்வந்துள்ளன.

தற்போது இந்தியாவில் செயல்படும் ஸ்மார்ட் சிட்டி கிளப்பில் 67 பிரெஞ்சு நிறுவனங்கள் உள்ளன. புதுவையில் பொலிவுறு நகர திட்டத்தை செயல்படுத்த பிரெஞ்சு நிறுவனங்களுக்கு நிபுணத்துவம் உள்ளது. அவர்கள் போக்குவரத்து, குடிநீர் வசதி, குப்பை மேலாண்மை போன்றவற்றில் அதிகம் நிபுணத்துவம் பெற்றுள்ளனர் என்றார்.

 இந்த கருத்தரங்கில் தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, உள்ளாட்சி துறை செயலர் ஜவஹர், புதுவைக்கான பிரெஞ்சு துணைத் தூதர் பிலிப் ஜான்வியர் கமியாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com