அரசு சுவர்களில் அனுமதியின்றி விளம்பரம்: உயர்நீதிமன்றத்தில் புகார்

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் அரசு சுவர்களில் அனுமதியின்றி விளம்பரங்கள் செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பிரம்மா புகார் அளித்துள்ளார்.

திருநெல்வேலி,  திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் அரசு சுவர்களில் அனுமதியின்றி விளம்பரங்கள் செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பிரம்மா புகார் அளித்துள்ளார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த தகவல் உரிமைச் சட்ட ஆர்வலரும், வழக்குரைஞருமான பிரம்மா அளித்துள்ள புகார் மனு: அரசு அலுவலகங்கள், அரசு கட்டடங்கள், சுற்றுச் சுவர்களில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அனுமதியில்லாமல் விளம்பங்கள் செய்யவோ, சுவரொட்டிகள் ஒட்டவோ, பதாகைகள் வைப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக சுவர்கள், கட்டடங்களில் சுவரொட்டிகள், விளம்பரங்கள், பதாகைகள் வைக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதேபோல, மாநகராட்சிக்கு சொந்தமான மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள், குப்பைத் தொட்டி, குடிநீர் குழாய்கள் ஆகியவற்றிலும் விளம்பரங்கள் உள்ளன.

திருநெல்வேலி மாநகராட்சியில் அனுமதி பெற்றோ, கட்டணம் செலுத்தியோ இத்தகைய விளம்பரங்கள் இல்லை என்பதை மாநகராட்சியும் உறுதி செய்துள்ளது. திருநெல்வேலி வண்ணார்பேட்டை, சந்திப்புப் பேருந்து நிலையப் பகுதிகளிóல் காவல்துறை கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட இடங்களிலும் அனுமதியின்றி விளம்பரங்கள் உள்ளன.

இதுமட்டுமல்லாது, திருநெல்வேலி புறவழிச் சாலைகளில்ல் உள்ள மேம்பாலம், பாளையங்கோட்டை-திருநெல்வேலி நகரங்களை இணைக்கும் சுலோசன முதலியார் மேம்பாலம், ஈரடுக்கு மேம்பாலம், காவல்துறைக்கு சொந்தமான குடியிருப்புகள், கட்டடங்கள், பொதுப்பணித்துறை கட்டடங்கள், அரசு சித்த மருத்துவக் கல்லூரி சுற்றுச் சுவர், சட்டக் கல்லூரி கட்டடம், நீதிமன்றக் கட்டடம், மருந்தியல் கூடம், மின்வாரிய கட்டடங்கள் என அனைத்து இடங்களிலும் அனுமதியின்றி விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, திருநெல்வேலி மாநகரக் காவல்துறையிலும், மாநகராட்சி ஆணையரிடமும் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இத்தகைய இடங்களில் உள்ள விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாகைகளை அப்புறப்படுத்தி அரசு சுவர்களில் வரலாற்று நினைவு புகைப்படங்கள், தகவல்களை இடம்பெறச் செய்ய வேண்டும்.

இதற்கு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாநகரக் காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என அந்தப் புகார் மனுவிóல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புகாருக்கு ஆதாரமாக புகைப்படங்களையும் இணைத்து உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com