ஜெயலலிதாவின் விஷன் 2023: தொலைநோக்குத் திட்டமா - தொலைந்துபோன திட்டமா?

ஒரு மன்னன் எப்படி இருக்க வேண்டும், ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும், என்பதை அன்றே தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.
ஜெயலலிதாவின் விஷன் 2023: தொலைநோக்குத் திட்டமா - தொலைந்துபோன திட்டமா?

ஒரு மன்னன் எப்படி இருக்க வேண்டும், ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும், என்பதை அன்றே தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.
"குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு."
அதாவது - முடிமன்னனாயிருப்பினும் குடிமக்கள் கருத்தை மதித்து ஆட்சிபுரிய வேண்டும் என்பதாம்.  மன்னனே மக்கள் கருத்தை மதித்து ஆட்சி செய்ய வேண்டும் எனும்போது, மக்களாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோர், மக்கள் கருத்தை நன்கு மதித்து ஆட்சிபுரிய வேண்டுமென்பது நாம் சொல்லாமலே புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அவ்வாறு மக்கள் விரும்பும் அரசாக ஒரு அரசு இருக்க வேண்டும் என்றால் மக்கள், நலப்பணிகளையே திட்டமிட்டு, திட்டமிட்ட காலத்திற்குள்  நிறைவேற்ற வேண்டும் என்பதும் மிக முக்கியம் அல்லவா.

அந்த வகையில், கடந்த 2011-ம் ஆண்டில் பொறுப்பேற்றது முதல் இன்று வரை, அதிமுக தலைமையிலான அரசு தமிழக மக்களுக்கான நலதிட்டங்கள் எவற்றை எல்லாம் நிறைவேற்றி இருக்கிறது என்று இப்போது நாம்  நினைத்துப் பார்க்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.  

தமிழகத்தை தலைநிமிரச் செய்வதுதான் அ.தி.மு.க.வின் லட்சியம் என்ற பிரகடனத்தோடு ஆட்சியைப் பிடித்த அதிமுகஅரசு அடித்தட்டு மக்களுக்கு எத்தனை எத்தனையோ நலத்திடங்களை வாரி வழங்கியிருப்பதை மறுக்க முடியாது. ஏழை எளியோருக்கு ஆடு, மாடு, தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி,  பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி, உலகப் பிரசித்தி பெற்ற அம்மா உணவகம் போன்ற பல நலத்திடங்கள், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது செயல்படுத்தப்பட்டன.

இவையனைத்தும் மக்களின் வரவேற்பையும் பெற்றன. இவற்றுக்கெல்லாம் மேலாக கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி, தமிழ்நாடு விஷன் 2023 என்ற ஒரு ஆவணத்தை அன்று முதல்வராக இருந்த ஜெயலலிதா வெளியிட்டார்.  

இதன் முக்கிய நோக்கம், தமிழகத்தை அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிலேயே ஒரு முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும் என்பதுதான். குறிப்பாக அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம், படித்தவர்களுக்கு திறமைக்கேற்ற ஊதியத்துடன் வேலை, வறுமையை முற்றிலும் ஒழித்து, விவசாயம், கட்டமைப்பு, உற்பத்தி, சேவைத் துறை உள்ளிட்ட பல துறைகளில் தமிழகத்தை முன்னேற்றுவது ஒன்றே இத்திட்டத்தின் குறிக்கோள் என்று சொல்லப்பட்டது.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ.4.5 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதுதொடர்பாக அப்போது நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பொருளாதாரத்தை வேகமாக வளர்ச்சி அடையச் செய்யவும், பெரும் மாற்றங்களை ஏற்படுத்தவும், 15 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முக்கியக் கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு தேவை என இத்தொலை நோக்குத் திட்டம் கணக்கிட்டுள்ளது.

இந்தக் கொள்கை இலக்குகளைக் கருத்தில் கொண்டு, இந்த வரவு-செலவுத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக 1,000 கோடி ரூபாயும் 2012-2013 வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

2023 தொலை நோக்குத் திட்டத்தில், நமது மாநிலத்தின் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் இரண்டு இலக்க அளவிலும், தேசிய சராசரி வளர்ச்சியை விட இரண்டு சதவீதம் கூடுதலாகவும் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து, அத்தகைய வேகமான பொருளாதார வளர்ச்சியின் மூலம் நமது மாநிலத்தின் தனி நபர் வருமானத்தை 2023-ம் ஆண்டிற்குள் உயர், நடுத்தர வருவாய் நாடுகளின் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். இந்த இலக்கை அடைய நாம் அயராது பாடுபடுவோம் என்றும் ஓ. பன்னீர் செல்வம் உறுதியளித்தார். 

அந்த ஆவணம் வெளியிடப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், அதன் இலக்குகளை எட்டுவதில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இந்த இலக்கை எட்ட வேண்டுமானால், தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 15 சதவீதமும், பொருளாதார உற்பத்தி 11 சதவீதமும் அதிகரிக்க வேண்டும் ஆனால், தற்போதைய நிலை கேள்விக்குறியாகவே இருக்கிறது. 

மேலும், அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்ய 25 லட்சம் வீடுகள் கட்டுபடியாகும் விலையில் கட்டப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன, திருமழிசை துணைநகரத் திட்டம் எந்த அளவில் உள்ளது என்பது குறித்தும்,  20 ஆயிரம் மெகாவாட் அனல் மின்சாரம், 10,000 மெகாவாட் மரபு சாரா மின்சாரம், 5000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள் போன்றவை குறித்தும் கேள்விகள் கூட எழுப்ப முடியாத நிலையில்தான் தமிழக மக்களும் எதிர்க்கட்சிகளும் உள்ளன என்றால் அது மிகையில்லை. 

2023 திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சுற்றுலா சார்ந்த உட்கட்டமைப்புகளை மேம்படுத்த10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருவதாகவும், இதன் மூலம் தமிழகத்துக்கு வந்து செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 1.5 கோடி அளவுக்கு அதிகரிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலா துறை அமைச்சராக இருந்த வெல்லமண்டி நடராஜன் கடந்த ஆண்டு கூறினார். 

அதுமட்டுமல்ல செங்கல்பட்டு - தூத்துக்குடி, தூத்துக்குடி - கோவை, கோவை - செங்கல்பட்டு இடையே 24 ஆயிரம் கோடி ரூபாயில் முக்கோண 6 வழி மற்றும் 8 வழிச் சாலைகள், 1.88 லட்சம் கோடி ரூபாய்ச் செலவில் மத்திய அரசுடன் இணைந்து ரயில் பாதை மேம்பாடு, 25 ஆயிரம் கோடியில் விமான நிலைய விரிவாக்கத் திட்டம், 1,60,985 கோடி ரூபாயில் தொழில் துறைத் திட்டங்கள், 25 ஆயிரம் கோடி ரூபாயில் நகர்ப்புறங்களில் குடிசைகளில் வாழும் மக்களுக்குப் புதிய வீடுகள், என்ற விஷன் 2023 அறிவிப்புகள் எல்லாம் தற்போது வெற்று அறிவிப்புகளாக வீணில் கிடக்கிறதோ என்ற ஐயம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

கடந்த 2012 ஆம் ஆண்டில் ரூ.26,625 கோடியில் 26 திட்டங்களைத் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால், அவற்றில் எந்தெந்த திட்டப்பணிகள் எந்த அளவில் உள்ளன என்பது குறித்தும் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் பற்றியும் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அதிமுக அரசு விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொலைநோக்குத் திட்டம் 2023-ன் இலக்குகளை எட்ட இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புமா என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர். மேலும் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு கடந்த 5 மாதங்களாக பல்வேறு உட்கட்சி விவகாரங்களில் சிக்கி முடங்கிக் கிடக்கிறது.

அரசு இயந்திரம் முற்றிலும் செயல்பாடாத நிலையில் ஏராளமான அரசு திட்டங்கள் தேக்க நிலையில் உள்ளன. முதல்வர் இருக்கைக்கு நடந்த அதிகாரப் போட்டியில், வாக்களித்த மக்களை ஆளும் தரப்பினர் மறந்துவிட்டனர் என்றே சொல்ல வேண்டும். வாக்களித்ததோடு மக்களின் கடமை முடிந்து விட்டதாக எண்ணும் ஆளும் கட்சியினரைப் பார்த்து இப்போது மக்கள் சில கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர். 

குடிநீர் பிரச்னை தொடங்கி சாலை செப்பனிடுதல் வரை எல்லாமும் திட்டமாகவே இருக்கிறதே எப்போது இவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றி நம் வாழ்வாதாரத்தை பெருக்கப்போகிறார்கள் என்ற ஏக்கத்தோடு காத்துள்ளனர் மக்கள்.

மக்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் தற்போது பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு விஷன் 2023 என்ற திட்டம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுவதோடு இலக்கை எட்டுவதற்கான வேகத்தை அதிகரித்தால் மட்டுமே இந்த அரசு மக்கள் விரும்பும் அரசாகவும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கையில் இருந்து அடிபிறழாத அரசாகவும் இருக்கும் என்றே கருதுகிறோம்.
                                                              -திருமலை சோமு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com