ஜெயலலிதாவை குறை கூறும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை: அன்பழகன் எம்.எல்.ஏ.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குறை கூறும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை என புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக கட்சி தலைவர்

புதுச்சேரி: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குறை கூறும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை என புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். அவர் ஞாயிற்றுக்கிழமை புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற பகட்டுவேஷம் போட்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சி தோல்வி அடைந்ததால் தற்போது வீணாக பேசி வருகிறார். 

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவரை புகழ்ந்து பேசி அதில் அரசியல் ஆதாயம் தேட ஸ்டாலின் செய்த முயற்சி பலிக்கவில்லை. அதன் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை பேரவையில் கலவரத்தில் ஈடுபட்டு ஆளும் கட்சியின் ஒருசிலரின் துணையோடு ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் செய்த சதி அதிமுகவின் எம்.எல்.ஏக்களால் முறியடிக்கப்பட்டது. 

அதிலும் தோல்வி கண்ட ஸ்டாலின் சென்னை பெரம்பலூரை சேர்ந்த ராமசீதா என்ற போலி மருத்துவரை பயன்படுத்தி ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் மரணம் அடைந்துவிட்டதாக ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் வலைதளங்கள் வாயிலாக பொய்யான கருத்தினை பரப்ப செய்தார்.

பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு ராமசீதா போலி மருத்துவர் என தெரியவந்ததையடுத்து காவல்துறையினர் அவர் மீது உரிய வழக்க பதிவு செய்துள்ளனர்.  இந்நிலையில் ஸ்டாலின் ராமசீதாவிற்கு ஆதரவாக பேசுவதன் மூலம் அவரின் திரைமறைவு நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் கலவரத்தை தூண்டிவிட்ட ஸ்டாலின் மீதும் தமிழக அரசு வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

ஜெயலலிதா இறந்த போது அவரை புகழ்ந்த ஸ்டாலின் தற்போது ஜெயலலிதாவின் படத்தை வைக்க கூடாது எனக்கூறுவது  கண்டிக்கத்தக்கது.
ஜெயலலிதாவை பற்றி பேச ஸ்டாலினுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எந்த அருகதையும் கிடையாது.  ஜெயலலிதாவை கொலையாளி என கூறிய தனது கருத்தை ஸ்டாலின் உடனடியாக திரும்ப பெற வேண்டும் மேலும் இதுகுறித்து உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

பேரவை தலைவரின் மாண்புக்கு மரியாதை அளிக்காமல் திமுக எம்.எல்.ஏக்கள் பேரவைத் தலைவரின் இருக்கையில் அமர்ந்ததை நாராயணசாமி ஆதரித்து பேசுவது கண்டிக்கத்தக்கது. பல்வேறு சம்பவங்ளில் முதல்வர் நாராயணசாமி இரட்டை வேடம் போடுகிறார். புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தும் இதுவரை மத்திய குழு வந்த பார்க்க எந்த  முயற்சிகளையும் நாராயணசாமி எடுக்கவில்லை. 

இனியும் மக்களை ஏமாற்றாமல் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு நாராயணசாமி செயல்பாடு இருக்க வேண்டும்.  நாராயணசாமியும், ஆளுநரும் வீண் விளம்பரம் தேடிக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுவதை கைவிட்டு மாநில வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர கவனம் செலுத்த வேண்டும். இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் அன்பழகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com