இந்தியாவில் புள்ளியியல் துறையில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள்பயிலரங்கில் தகவல்

இந்தியாவில் புள்ளியியல் துறையில் 4 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் புள்ளியியல் துறையில் 4 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆகவே, மாணவர்கள் இத் துறை குறித்து அறிந்து உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென பயிலரங்கில் தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புள்ளியியலும் அதன் பயன்பாடுகளும் என்ற தலைப்பில் சிறப்பு பயிலரங்கம் அபிஷேகப்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, ராணி அண்ணா கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த இளநிலை புள்ளியியல் பயிலும் மாணவர்-மாணவிகள் பங்கேற்றனர்.

பயிலரங்கில் பேராசிரியர்கள் கூறியதாவது: உணவு, உற்பத்தி, விவசாயம், தொழில்துறை, மின்உற்பத்தி, போக்குவரத்து, தகவல் தொடர்பு துறை என புள்ளியியல் தொடர்பில்லாத துறைகளே இல்லை என்று சொல்லலாம். இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பெரும் பங்காற்றிய ஐந்தாண்டு திட்டங்களை வகுக்க புள்ளியியல் துறையின் பங்கு மிகவும் அதிகம். அறிவியல், கணிதம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக புள்ளியல் என்பது மிகவும் முக்கியமானது. ஆனால், அதுகுறிóத்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை.

மக்கள்தொகை கணக்கெடுப்பு, சர்வதேச சந்தை மதிப்பீடு, புதிய திட்டங்களின் தேவைகள் மற்றும் நிறைவடைந்துள்ள நிலை குறித்து எளிதாக கணக்கில் கொள்ள புள்ளியியலே உதவுகிறது. தனியார் துறையினர் புள்ளியில் பணிகளை அதிகம் செய்கிறார்கள். பல்வேறு வகையான தரவுகளை சேர்ப்பது, தொகுத்து வழங்குவது போன்றவற்றை அயல்நாடுகளில் கொடுத்து கூட செய்கிறார்கள். தனியார் மற்றும் அரசு துறைகளில் சேர்த்து புள்ளியியல் துறைசார் பணியிடங்கள் 4 லட்சத்துக்கும் மேல் உள்ளன. இதுதவிர புதிய புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிக்கொண்டே வருகின்றன.

ஐஎஸ்ஓ தரச்சான்று பெற விண்ணப்பிக்கும் மருத்துவமனைகள் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் ஒரு முதுநிலை புள்ளியியல் பட்டதாரிகளைப் பணியில் சேர்த்திருக்க வேண்டியது அவசியமாகும். இதேபோல சர்வதேச கப்பல்களில் புள்ளியியல் துறை அலுவலர் இருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. 

புள்ளியியல் படிப்புகளுக்கும் பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு உதவிகளைச் செய்து வருகிறது. ஆய்வு மாணவர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.28 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது. பொறியியல், மருத்துவம், பட்டயக்கணக்கியல் உள்ளிட்ட பல்வேறு வருவாய் தரும் உயர்படிப்புகளுக்கு இணையானதாக புள்ளியியல் உள்ளது. அதுகுறித்து பிளஸ்-2 முடிக்கும் மாணவர்கள், கிராமப்புற மாணவர்களுக்குக் கொண்டு செல்ல அரசும், பல்கலைக்கழகங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அதற்கு இதுபோன்ற பயிலரங்குகளை அதிகளவில் நடத்த வேண்டும் என்றனர்.

இப் பயிலரங்கில் பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் கே.கே.சுரேஷ், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் வி.ராஜகோபாலன், திருச்சி புனித சூசையப்பர் கல்லூரி பேராசிரியர் ஜி.ஸ்டீபன் வின்சென்ட், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியர் எம்.முகம்மதுசாதிக், இன்போசிஸ் நிறுவன அதிகாரி என்.சோனைமுத்து, பேராசிரியர் வி.பாலமுருகன் ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் பேசினர். 

ஏற்பாடுகளை புள்ளியில் துறை பேராசிரியர்கள் க.செந்தாமரைக் கண்ணன், அ.லோகநாதன், அ.ராஜரத்தினம், ப.ஆறுமுகம், இரா.சசிக்குமார், வே.தினேஷ்குமார், கு.மனோஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com