ஆற்று மணல் கொள்ளை: சேகர் ரெட்டி கணக்கும், அரசுக்கு ஏற்பட்ட இழப்பும்!

வயலுக்கு இறைக்கும் நீரில் ஒரு பகுதி விழலுக்கு பாய்ந்தால் கூட பரவாயில்லை...
ஆற்று மணல் கொள்ளை: சேகர் ரெட்டி கணக்கும், அரசுக்கு ஏற்பட்ட இழப்பும்!

வயலுக்கு இறைக்கும் நீரில் ஒரு பகுதி விழலுக்கு பாய்ந்தால் கூட பரவாயில்லை... ஆனால், மொத்த நீரும் விழலுக்கே பாய்ந்தால் என்ன விளைவுகள் ஏற்படுமோ, அது தான் ஆற்று மணல் விற்பனையில் தமிழக அரசுக்கும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆற்று மணல் விற்பனையில் ஒப்பந்தக்காரர்களுக்கு ஆயிரமாயிரம் கோடிகள் குவியும் நிலையில் அரசுக்கு  ஆண்டுக்கு ரூ.150 கோடி கூட கிடைக்கவில்லை.
மணல் விற்பனை மூலமான அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 2003-ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகள் அரசுடைமையாக்கப்பட்டன. ஆனால், அரசின் வருவாய் மட்டும் அதிகரிக்கவில்லை. 2003 -04 ஆம் ஆண்டில் ரூ.150 கோடியாக இருந்த மணல் வருமானம்  10 ஆண்டுகள் கழித்து 2013-14 ஆம் ஆண்டில் ரூ.133.37 கோடியாக குறைந்து விட்டது. இடையில் சில ஆண்டுகள் மணல் விற்பனை மூலமான வருவாய் ரூ.200 கோடியை நெருங்கிய போதிலும், அரசுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வருவாயில் நூற்றில் ஒரு பங்கு கூட அரசுக்கு கிடைக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் தினமும் ஒரு லட்சம் சரக்குந்துகளில் மணல் அள்ளப்படும் நிலையில், அதிலிருந்து அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயை ஒப்பந்தக்காரர்களும், ஆட்சியாளர்களும் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கிறார்கள் என்பதை கடந்த 26-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் விளக்கியிருந்தேன். மணல் விற்பனையில் அரசுக்கு கிடைப்பதை விட மணல் கொள்ளையருக்கு அதிக வருவாய் கிடைப்பதை கருப்புப்பண வழக்கில் கைதாகியுள்ள சேகர்ரெட்டியே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
தவறான வழிகளில் சேர்த்த கருப்புப்பணத்தை வெளுத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி, தம்மை பிணையில் விடுவிக்கக் கோரி சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் சில உண்மைகளை வெளியிட்டிருக்கிறார். கடந்த 27-ஆம் தேதி பிணை மனு விசாரணைக்கு வந்த போது சேகர் ரெட்டி சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்,‘‘ சேகர் ரெட்டி   தரப்பிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.33.60 கோடி மதிப்புள்ள  2000 ரூபாய் தாள்கள் அனைத்தும், புதிய தாள்கள் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 25 நாட்கள் சட்டப்பூர்வமாக நடந்த மணல் விற்பனை மூலம் கிடைத்தவை’’ என்று தெரிவித்திருக்கிறார். சேகர் ரெட்டி சார்பில் அவரது வழக்கறிஞர் அளித்த தகவல்களின்படி, மணல் விற்பனை மூலம் ஒரு நாளைக்கு ரூ. 1.35 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது.
தமிழகத்தில் ஒரு சரக்குந்தில் 3 அலகுகள் மணலை ஏற்ற முடியும். 3 அலகு மணலுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ.950 ஆகும். இந்த தொகை அரசுக்கு சேர வேண்டும். இதிலிருந்து சரக்குந்துகளில் மணலை ஏற்றுவதற்காக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.220 வழங்கப்படுகிறது. ஒரு சரக்குந்து மணலை ஏற்றி விடுவதற்காக வழங்கப்படும் 220 ரூபாய் மூலமே சேகர் ரெட்டிக்கு தினமும் ரூ.1.35 கோடி முதல் ரூ.1.50 கோடி வரை வருமானம் கிடைக்கும் போது அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைக்க வேண்டும்? இத்தனைக்கும் சேகர் ரெட்டி தமிழ்நாடு முழுவதும் ஆற்று மணல் அள்ளவில்லை. பாலாற்றில் மட்டும் தான் மணல் அள்ளுகிறார். பாலாற்றில் அள்ளப்படுவதை விட சுமார் 10 மடங்கு மணல் தமிழகம் முழுவதும் அள்ளப்படுகிறது. அப்படியானால் மணல் அள்ளுபவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.15 கோடியும், அரசுக்கு ரூ.46 கோடியும் மணல் விற்பனை மூலம் வருமானம் கிடைக்க வேண்டும்.
ஆண்டுக்கு சராசரியாக 300 நாட்களுக்கு மணல் அள்ளப்படுவதாக வைத்துக் கொண்டால், அரசுக்கு  மட்டும் ரூ.13,800 கோடி வருமானம் கிடைக்க வேண்டும். இது சேகர் ரெட்டியால் அதிகாரப் பூர்வமான கணக்கில் காட்டப்பட்ட மணலுக்கு, ஒரு சரக்குந்துக்கு ரூ.950 என்ற தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டது ஆகும். ஒரு சரக்குந்தில் 3 அலகுகளுக்கு பதிலாக 5 அலகுகளை ஏற்றி, அதற்காக கூடுதல் பணம் வசூலித்து அரசிடம் வழங்காமல் ஏமாற்றுவது,  ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சரக்குந்துகளில் மணலை ஏற்றி விட்டு அதில் பாதிக்கும் குறைவாக மட்டும் கணக்கு காட்டுவது ஆகியவை கணக்கில் சேர்க்கப்படவில்லை. இந்த வருமானமும் கணக்கில் சேர்க்கப்பட்டால் நான் தொடர்ந்து கூறி வருவதைப் போல மணல் விற்பனை மூலம் மட்டும் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.35,000 கோடி அளவு வருமானம் கிடைக்கும் என்பது உறுதி.
2003-ஆம் ஆண்டில் மணல் குவாரிகள் அரசுடைமையாக்கப்பட்ட போது இருந்ததை விட இப்போது மணல் வணிகம் பல மடங்கு அதிகரித்திருப்பது தமிழக அரசுக்கே தெரியும். அவ்வாறு இருக்கும் போது மணல் விற்பனை மூலமான வருவாய் அதிகரிக்காதது ஏன்? என்பது குறித்து ஆட்சியாளர்கள் ஆய்வு நடத்தியிருக்க வேண்டாமா? தமிழகத்தில் மது விற்பனை வருவாய் குறைந்த போது, உடனடியாக மது வணிகத்தின் வலிமை, பலவீனம், வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை அறிவதற்காக ஸ்வாட் (SWOT- Strengths, Weaknesses, Opportunities, Threats) பகுப்பாய்வு நடத்திய தமிழக அரசு மணல் வணிகத்தின் மூலமான வருவாயை அதிகரிப்பதற்கு பகுப்பாய்வு நடத்தியிருக்க வேண்டாமா? ஆனால், அத்தகைய பகுப்பாய்வை ஆட்சியாளர்கள் நடத்தாததற்கு காரணம் மணல் விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயை மணல் கொள்ளையர்களுடன் சேர்ந்து அவர்களே சுரண்டுவது தான். அதிமுக, திமுக ஆகிய இரு ஆட்சிகளிலும் இந்த சுரண்டல் நடப்பது தான் கொடுமையாகும்.
ஆற்று மணல் விற்பனையை இன்று முதல் அரசுடைமை ஆக்கினால் கூட ஆண்டுக்கு ரூ.20,000 கோடி முதல் ரூ.25,000 கோடி வரை கூடுதல் வருமானம் கிடைக்கும். எனவே, மணல் வணிகத்தை உடனடியாக அரசுடமையாக்க வேண்டும். இல்லாவிட்டால் மணல் மூலம் மக்கள் நலனுக்கு செலவிடப்பட வேண்டிய வருவாயை சுரண்டிய ஆட்சியாளர்களை வாய்ப்பு கிடைக்கும் போது மக்கள் தண்டிப்பார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com