இந்தியாவின் வளர்ச்சியை தடம் புரளச் செய்கிறார் மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த இந்தியப் பொருளாதாரத்தை தடம் புரளச் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

புது தில்லி வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த இந்தியப் பொருளாதாரத்தை தடம் புரளச் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

"இந்தியா இனிமேலும் வளரும் பொருளாதார சக்தியாக இருக்க முடியாது - பிரதமர் மோடிக்கு நன்றி' என்ற தலைப்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் முகநூலில் (ஃபேக்புக்) ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து நமது பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டுமென்று நமது எதிரிகள் போராடி வருகின்றனர். அவர்களது வேலையை பிரதமர் மோடி மிகவும் சிறப்பாக செய்துவிட்டார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 7.6 சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாகக் குறைத்து சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) சமீபத்தில் மதிப்பீடு வெளியிட்டுள்ளது. மோடி அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைதான் இதற்கு முழு முதல் காரணம்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் வேளாண்மை, தொழில், வர்த்தகம் என அனைத்துத் துறைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனை சர்வதேச அளவில் அனைத்து பொருளாதார நிபுணர்களும் விமர்சித்துள்ளனர். இதற்கு முன்பு இந்தியாவில் எந்த பிரதமரும் இந்த அளவுக்கு மோசமான நடவடிக்கையை எடுத்து கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது இல்லை.

மோடி அரசின் மோசமான கொள்கைகள் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த இந்தியப் பொருளாதாரத்தை மோடி தடம் புரளச் செய்துவிட்டார். 2013-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு மோடி வந்தபோது அவரிடம் சிறந்த உரை எழுத்தாளர்களும், அவரை விளம்பரப்படுத்தும் உத்தி தெரிந்தவர்களும் இருந்தார்கள்.

தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி அவர் வேலைவாய்ப்பையும் உருவாக்கவில்லை, பொருளாதார வளரச்சியையும் முன்னெடுக்கவில்லை. இப்போது உண்மையில் அவர் இந்தியப் பொருளாதாரத்தை பரிதாபகரமான நிலைக்குத் தள்ளிவிட்டார் என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com