அமைச்சரவை முடிவுகளைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியப்படுத்த முடியாது: பினராயி விஜயன்

அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகளைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் தெரியப்படுத்த முடியாது
அமைச்சரவை முடிவுகளைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியப்படுத்த முடியாது: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகளைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் தெரியப்படுத்த முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் தகவல் ஆணையம் சார்பில் இன்று நடைபெற்ற ஆர்டிஐ குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பினராயி விஜயன் கூறியதாவது:

ஆர்டிஐ மூலம் ஊழல் கட்டுப்படுத்தப்படும். ஏனென்றால், நிர்வாக அமைப்புக்கு ஊழல் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. எனினும், இந்தச் சட்டத்தை சிலர் தவறாகப் பயன்படுத்த முயலுகின்றனர். அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அரசின் அனைத்து துறைகளையும் இணைக்கும் வகையில் மென்பொருள் ஒன்றை மேம்படுத்த வேண்டும் என்ற மாநில தகவல் ஆணையத்தின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்.

பள்ளிப் பாடத்திலும் ஆர்டிஐ சட்டம் தொடர்பான பாடத்தைச் சேர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  ஆர்டிஐ சட்டத்தின்படி தகவல் கோரப்படும்போது, இரும்புத் திரைக்குப் பின்னால் எந்தவொரு தகவலையும், ஆவணங்களையும் மறைத்து வைக்க வேண்டிய அவசியமில்லை.

அதேநேரம், அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகள் அமல்படுத்தப்படும் வரை அதுதொடர்பான தகவல்களை அந்தச் சட்டத்தின்கீழ் தெரியப்படுத்த முடியாது என்றார் பினராயி விஜயன்.

முன்னதாக, அமைச்சரவையில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளையும் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கேரள தகவல் ஆணையத்தின் தலைவர் வின்சன் எம். பால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டார்.

எனினும், மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இந்த உத்தரவுக்கு கேரள அரசு தடை வாங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com