ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசர சட்டம் கொண்டு வந்தால் எதிர்ப்போம்: பீட்டா அறிவிப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால் அதை சட்ட ரீதியாக அணுகுவோம் என்று ‘பீட்டா’ அமைப்பு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசர சட்டம் கொண்டு வந்தால் எதிர்ப்போம்: பீட்டா அறிவிப்பு

புதுதில்லி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால் அதை சட்ட ரீதியாக அணுகுவோம் என்று ‘பீட்டா’ அமைப்பு கூறி உள்ளது.
இது குறித்து ‘பீட்டா’ இந்தியா அமைப்பின் செய்தி தொடர்பாளர் மணிலால் வல்லியத்தே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்களது விழிப்புணர்வு பிரசாரம் அனைத்து விலங்குகளின் நலன்களுக்காகவும் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் குறிப்பிட்ட பூர்வீக காளைகள் இனம் அழிந்து வருவதற்கு 1980-ல் தமிழக அரசு மேற்கொண்ட வெள்ளை புரட்சியும் (பால் உற்பத்தி பெருக்கம்), கலப்பின காளை விருத்தி திட்டங்களுமே காரணம். அப்போது முதலே பூர்வீக காளைகள் இனம் அழியத் தொடங்கி விட்டது.

தவறாக புரிந்து கொண்டதன் அடிப்படையிலேயே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடக்கின்றன. எனவே அனைத்து அரசியல்வாதிகளும் இதுபற்றி முடிவு எடுக்கும் முன்பாக இது தொடர்பாக இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள உண்மைகளையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் படித்து பார்க்க வேண்டும்.
ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு கொடுமை நிகழ்த்தப்படுகிறது. காளைகள், தங்களுக்கு துன்புறுத்தல் ஏற்பட்டாலோ, அல்லது சண்டையிட்டாலோ மட்டுமே எதிர்ப்பை காட்டும் குணாதிசயம் கொண்டவை. வலி, பயம், காயம் ஏற்படும்போதுதான் அவை எதிர்ப்பை காட்டத் தயாராகும்.

ஜல்லிக்கட்டு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. எனவே, அது தேவையற்ற பாதிப்பு என்கிற வகையில் வருகிறது. பாரம்பரியமா? சட்டமா? என்கிற கேள்வி எழும்போது சட்டமே முன்னுரிமை பெறும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. சட்டத்தையும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மதிப்பதால் ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக மத்திய, மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், அதை சட்ட ரீதியான வழியில் அணுகுவோம். ஜல்லிக்கட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தையும் தொடர்ந்து மேற்கொள்வோம் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com