ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி: வெளிநாட்டு குளிர்பானங்களை சவப்பாடையில் ஏற்றி பெண்கள் ஊர்வலம்

புதுச்சேரி: ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் எதிரொலியாக ஞாயிற்றுக்கிழமை 

புதுச்சேரி: ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் எதிரொலியாக ஞாயிற்றுக்கிழமை  புதுவையில் வெளிநாட்டு குளிர்பானங்களை சவப்பாடையில் ஏற்றி பெண்கள் ஊர்வலமாகச் சென்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரியும், காளை மாட்டை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வலியுறுத்தியும் தமிழகம் மற்றும் புதுவையில் மாணவர்கள் கடந்த 6 நாட்களாக அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில்  பொதுமக்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியதை அடுத்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.

எனினும் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தை போராட்டக்குழுவினர் ஏற்கவில்லை. ஜல்லிக்கட்டை நிரந்தரமாக நடத்த வகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தை நீடித்துள்ளனர்.

ஊக்கப்படுத்தும் நாட்டுப்புறக் கலைஞர்கள்

புதுவையிலும் ஏஎப்டி மைதானத்தில் எழுச்சி மாறாமல் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் தங்களது போராட்டத்தினை தொடர்ந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை உற்சாகப்படுத்த தமிழர்களின் கலைகளான சிலம்பம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வெயிலில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மோர், இளநீர் ஆகியவை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

வெளிநாட்டு குளிர்பானங்கள்

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர் அதிகமாக காணப் பட்டனர். மாணவர்களை விட மாணவி களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

மருத்துவ மாணவர்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக மருத்துவ முகாமினை நடத்தினர். சிறுவர்கள் நிரந்தரமாக  ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பினர்.

போராட்டக்களத்தில் வைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு மாடு போன்ற உருவத்திற்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.

புதுவை கருவடிக்குப்பத்தை சேர்ந்த பெண்கள் வெளிநாட்டு குளிர்பானங்களை சவப்பாடையில் ஏற்றி அங்குள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்றனர். சிவாஜி சிலை வரை ஊர்வலமாக சென்ற அவர்கள் அங்கு சவப்பாடையை போட்டு உடைத்து அன்னிய நாட்டு குளிர்பானங்களை இனி வாங்க மாட்டோம் என உறுதியேற்றனர்.

தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக வந்து ஏஎப்டி மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டனர். புதுவை ரோடியர் மைதானத்தில்  ஜல்லிக்கட்டுக்காக நடக்கும் போராட்ட களத்தில் கலைஞர் குபேந்திரன் காளை மாட்டினை தண்ணீரில் குளிப்பாட்டுவதை போன்ற மணல் சிறப்பத்தை வடிவமைத்திருந்தார்

புதுவை நாதஸ்வர, தவில் கலைஞர்கள் இன்று தவில் மற்றும் நாதஸ்வரம் வாசித்தவாறே வந்து  ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர் பீட்டா சின்னத்தை கொண்டு வந்து அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com