மம்தா கட்சியில் விரிசல்? 6 எம்.எல்.ஏ-க்கள் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களிப்பு...!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 சட்டப்பேரவை உறுப்பினர்களும் குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்குவாக்களித்தனர்.
மம்தா கட்சியில் விரிசல்? 6 எம்.எல்.ஏ-க்கள் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களிப்பு...!

குடியரசுத்தலைவர் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களித்தனர். இதனால் அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு வெளிச்சத்துக்கு வந்தது.

இதுகுறித்து பாஜக-வுக்கு வாக்களித்த சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவரான ஆஷிஷ் சாஹா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மம்தா பானர்ஜி அவர்கள் அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதில் முக்கியமானது மாநிலத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வேரோடு அகற்றுவதுதான்.

திரிபுராவில் அவர்கள் தான் கடந்த 25 வருடங்களாக ஆட்சி செய்து வருகின்றனர். ஆனால் இம்மாநிலம் எவ்விதத்திலும் வளர்ச்சியடையவில்லை. இதை நன்கு அறிந்த மம்தா பானர்ஜி அவர்கள் அதுகுறித்த நடவடிக்கையில் இதுவரையில் ஈடுபடவில்லை.

ஆனால் அதற்கு மாறாக எதிர்கட்சிகளின் வேட்பாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு பெற்றவருமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மீரா குமாருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது அவரது கொள்கைக்கு முற்றிலும் புறம்பானது.

மம்தா பானர்ஜி வேண்டுமானால் மீரா குமாருக்கு அவருடைய ஆதரவை தெரிவிக்கலாம். ஆனால் எங்களால் அது முடியாது. எனவே மம்தா பானர்ஜிக்கு தகுந்த பாடம் புகட்டும் விதமாக நாங்கள் அனைவரும் பாஜக வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு எங்கள் வாக்குகளை அளித்தோம். 

இதன்மூலம் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரான எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டோம் என்றார்.

முன்னதாக இதுபோன்று வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்ற பயத்தில் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மேற்குவங்கதிற்கு வந்து வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com