ஜேஎன்யுவில் ஏதோ தவறு இருப்பதை ஆர்ப்பாட்டங்கள் உணர்த்துகிறது: தில்லி உயர் நீதிமன்றம்

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) அதிகளவிலான மாணவர்கள் போராடுவது, அங்கு எதிலோ தவறு இருப்பதை காட்டுகிறது என்று தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) அதிகளவிலான மாணவர்கள் போராடுவது, அங்கு எதிலோ தவறு இருப்பதை காட்டுகிறது என்று தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

ஜேஎன்யுவில் எம்.பிஃல் மற்றும் பிஎச்.டி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை  கொள்கைக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை அணுக முடியாத வகையில் அங்கு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், கடந்த 9 மாதங்களில் இதுவரை 92 ஆர்ப்பாட்டங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்திருப்பதாக அதில் குறிப்பிட்டிருந்தது.

அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நிர்வாகக் கட்டடத்தில் இருந்து 100 மீ. தொலைவுக்குள்ளாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது என்று கடந்த 9-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், அந்த உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று ஜேஎன்யு நிர்வாகம் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது. அதுதொடர்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதி சஞ்சீவ் சச்தேவா கூறியதாவது:
மாணவர்கள் ஆர்ப்பாட்டம் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. நிர்வாகக் கட்டடத்தின் நடைபாதை மற்றும் பூங்கா பகுதிகளில் மாணவர்கள் அமைதியான முறையில் தங்களது ஆர்ப்பாட்டத்தை தொடரலாம். நிர்வாகக் கட்டடத்துக்கான போக்குவரத்துப் பாதையை தடை செய்யக் கூடாது.

மாணவர்களின் தொடர் ஆர்ப்பாட்டத்தைப் பார்க்கும்போது, பல்கலைக்கழகத்தில் ஏதோ தவறு இருப்பதைக் காட்டுகிறது. 9 மாதங்களில் இத்தனை ஆர்ப்பாட்டங்கள் நடப்பதற்கான காரணம் என்ன என்பதை பல்கலைக்கழக நிர்வாகம் என்றாவது சுயபரிசோதனை செய்துள்ளதா? ஆர்ப்பாட்டங்களுக்கான காரணம் அனைத்தும் அற்பமானதாக இருக்காது.

உரிய பேச்சுவார்த்தை மூலம் அதற்கு தீர்வு காணப்பட வேண்டும். ஜேஎன்யு மாணவர் அமைப்பானது தங்களது பிரதிநிதிகளாக 3-4 நபர்களை தேர்வு செய்யலாம். பல்கலைக்கழக நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தையை அவர்கள் மூலமாக மேற்கொள்ளலாம் என்று நீதிபதி சஞ்சீவ் சச்தேவா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com