தில்லியில் போராடும் விவசாயிகளை மத்திய அரசு அலட்சியப்படுத்துகிறது: வைகோ

தில்லியில் போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது
தில்லியில் போராடும் விவசாயிகளை மத்திய அரசு அலட்சியப்படுத்துகிறது: வைகோ

தில்லியில் போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
 தமிழக விவசாயிகள் தில்லியில் கடந்த பத்து நாள்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், காவிரியின் குறுக்கே அணைகள் கட்டுவதைத் தடுக்க வேண்டும், விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளுக்கான போராடி வருகின்றனர்.

 உலகுக்கே உணவு அளிக்கிற விவசாயிகள் தலைநகரில் அரை நிர்வாணப் பட்டினிப் போராட்டம் நடத்துவதை, மத்திய அரசு கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருவது கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 தமிழகத்தில் விவசாயம் பொய்த்துப் போனதற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடாமல் கர்நாடக மாநிலம் வஞ்சித்தது மட்டும் காரணம் இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்காமல் துரோகம் இழைத்த மத்திய அரசும் பொறுப்பு ஏற்க வேண்டும்.

 தமிழகத்தில் பயிர்கள் கருகியதைக் கண்டு அதிர்ச்சியாலும், தற்கொலை செய்து கொண்டும்  இதுவரை 275 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதையும் மத்திய அரசு பொருட்படுத்தவில்லை. 

 தமிழகத்தின் எதிர்காலத்தை நாசமாக்கி இருளில் தள்ளிவிடும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது கடும் கண்டனத்துக்குரியது. தில்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com