செந்தில்பாலாஜியின் உண்ணாவிரதப் போராட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

உண்ணாவிரதப் போராட்ட களத்தை காவல் துறையினர் மாற்றியுள்ளது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. இதனால் இன்று வெள்ளிக்கிழமை (மே 5)
செந்தில்பாலாஜியின் உண்ணாவிரதப் போராட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

கரூர்: உண்ணாவிரதப் போராட்ட களத்தை காவல் துறையினர் மாற்றியுள்ளது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. இதனால் இன்று வெள்ளிக்கிழமை (மே 5) நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டம் மீண்டும் தாற்காலிகமாக  ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார் முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி எம்எல்ஏ-வுமான வி.செந்தில்பாலாஜி.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.229.46 கோடி நிதி ஒதுக்கி வாங்கல்குப்புச்சிபாளையத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆனால், இக்கல்லூரிக்கான கட்டடப் பணிகளை தொடங்கவிடாமல் மக்களவை துணை தலைவர் மு. தம்பிதுரையும், போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கரும் தடுத்து வேறு இடத்துக்கு மாற்ற முயற்சித்து வருவதைக் கண்டித்தும், கடந்த 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதப்  போராட்டம் நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது.

அனுமதி கிடைக்காத நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதையொட்டி காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, இன்று வெள்ளிக்கிழமை (மே 5) உண்ணாவிரதம் நடத்த இருந்த நிலையில் வியாழக்கிழமை மாலை வாங்கலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக்கொள்ள காவல் துறையினர் அனுமதித்துள்ளனர்.

அந்த இடம் 500 பேர் கூட அமர முடியாது. எம்.பி, அமைச்சர் ஆகியோரது தூண்டுதலின் பேரில், எங்களது போராட்ட களத்தை காவல் துறையினர் மாற்றியுள்ளது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.

இதனால் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com