நிர்பயா குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

நிர்பயா குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
நிர்பயா குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

புதுதில்லி: நிர்பயா குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.

நிர்பயா கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக குற்றவாளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

தில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி இரவு, துணை மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா (மாற்றப்பட்ட பெயர்) என்ற இளம்பெண் தனது ஆண் நண்பருடன் பேருந்து ஒன்றில் பயணம் செய்தார். அப்போது, பேருந்தில் இருந்த 6 இளைஞர்கள் நிர்பயாவை கடுமையாக தாக்கி கூட்டு பலாத்காரம் செய்தனர். பின்னர், அவரையும், அவரது நண்பரையும் பேருந்திலிருந்து வெளியே வீசினர்.

இதில் படுகாயமடைந்த நிர்பயா, தில்லியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தில்லி போலீஸார், இதில் தொடர்புடைய முகேஷ், பவன், வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங், ராம் சிங், ஒரு சிறுவன் என 6 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கை 2013-ஆம் ஆண்டு விசாரித்த தில்லி பெருநகர நீதிமன்றம், அவர்களில் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது. மற்றொருவர் 18 வயதுக்கும் குறைவானவர் என்பதால் அவரை கூர்நோக்குப் பள்ளியில் சேர்க்குமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து, தண்டனைக்குள்ளான 5 பேரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ராம் சிங் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவானது, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர். பானுமதி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் முடிவில், நீதிபதிகள் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிக்கு கருணை காட்ட எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, 4 பேருக்கும்  தில்லி பெருநகர நீதிமன்றம் அளித்த தூக்குத்தண்டனையை உறுதிசெய்கிறது.

மேலும், துணிச்சலாக செய்யப்பட்ட இந்த குற்றம் நாட்டுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இது அரிதினும் அரிதான வழக்கு என்று தெரிவித்துள்ளனர்.
கொடூரமான கொலை என்பதால் தண்டைனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுனாமி ஆழிபேரலையைவிட மிகவும் மோசமானது நிர்பயா கொலை. பெண்களை மதித்திட சிறுவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். பெண்களுக்கு அதிகமான கொடூரங்கள் அதிகரித்து வருகிறது என வேதனை தெரிவித்தனர்.

மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என குற்றவாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com