நீட் தேர்வில் விலக்கு கோரி தமிழக அரசிடமிருந்து எந்த சட்டமுடிவும் வரவில்லை: குடியரசு தலைவர் அலுவலகம் விளக்கம்

தமிழக அரசிடமிருந்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரி எந்த சட்டமுடிவும் கிடைக்கவில்லை என குடியரசுத் தலைவர் அலுவலகம் விளக்கம்
நீட் தேர்வில் விலக்கு கோரி தமிழக அரசிடமிருந்து எந்த சட்டமுடிவும் வரவில்லை: குடியரசு தலைவர் அலுவலகம் விளக்கம்

புதுதில்லி: தமிழக அரசிடமிருந்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரி எந்த சட்டமுடிவும் கிடைக்கவில்லை என குடியரசுத் தலைவர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையில் அலட்சியம் காட்டுகிறதா தமிழக அரசு என்ற கேள்வி எழுந்துள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில் நாடு முழுவதும் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் 'நீட்' பொது நுழைவுத்தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு அவசரச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது. பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே கடந்த கல்வியாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 'நீட்' தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என அனைத்துக்கும் நீட் தேர்வு நடைபெற உள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.

இந்நிலையில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வகையில் இரண்டு சட்ட மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுத் தர மறுத்தது. மேலும் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இந்நிலையில், நீட் விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் இது தொடர்பாக குடியரசுத் தலைவலர் அலுவலகத்திற்கு கடந்த மாதம் 14-ஆம் தேதி ஒரு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து அந்த கடிதத்திற்கு குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் தனி அதிகாரி ராய் அவருக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் எந்த சட்ட முன்வடிவும் கிடைக்கவில்லை என்று கடந்த மாதம் 20-ஆம் தேதி எழுதிய பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான 'நீட்' பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை (மே 7) நடைபெறுகிறது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) நடத்தும் இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 11.35 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

மொத்தம் 103 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது. பெரும்பாலும் சிபிஎஸ்இ பள்ளிகளிலேயே தேர்வுகள் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com