வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு என்ன பெயர் என்று உங்களுக்கு தெரியுமா?

டி.டி.வி. தினகரன், சசிகலாவின் உதவியாளர்களை இலக்காகக் கொண்டு, வருமான வரித் துறை அதிகாரிகள் தமிழ்நாட்டில் நடத்தி வரும்
வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு என்ன பெயர் என்று உங்களுக்கு தெரியுமா?

சென்னை: டி.டி.வி. தினகரன், சசிகலாவின் உதவியாளர்களை இலக்காகக் கொண்டு, வருமான வரித் துறை அதிகாரிகள் தமிழ்நாட்டில் நடத்தி வரும் சோதனைக்கு   ‘ஆபரேஷன் கிளீன் மணி’ நடவடிக்கை என்றும் அதன் ஒரு பகுதியாகவே இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சோதனையை வருமான வரித் துறை நடத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இந்த அதிரடிக்குப் பிறகு, கடந்த ஆண்டு டிசம்பரில் தொழிலதிபர் சேகர் ரெட்டி இல்லத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவின் அலுவலகம், அவரது மகன் இல்லம் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. இந்தச் சோதனைகளால் தமிழகம் பெரும் பரபரப்புக்கு உள்ளானது.

இந்நிலையில், கடந்த ஓராண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான சோதனையை வருமான வரித் துறை நேற்று வியாழக்கிழமை மேற்கொண்டது. சுமார் 200 இடங்களில் இந்தச் சோதனை நடந்தது. சசிகலா, தினகரன் உறவினர்கள் அனைவரின் வீடுகளிலும் நடந்த இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சியிலிருந்து 14 கார்களில் தனித்தனி குழுவாக மன்னார்குடிக்கு வந்த வருமான வரித் துறை அதிகாரிகள், வியாழக்கிழமை காலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் மன்னார்குடியை அடுத்த சுந்தரக்கோட்டையில் உள்ள அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் சசிகலா, துணைப்பொதுச்செயலாளர் தினகரன் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்பட 200 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.  

சோதனை நடைபெற்ற அனைத்து இடங்களிலும் வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வீட்டிலிருந்தவர்களும் வெளியே அனுப்பப்படவில்லை. மாலை 4.30 மணி வரை இந்த அதிரடி சோதனை நடைபெற்றது.

இதேபோல், தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜின் ஆதரவாளரும், ஜெ. பேரவை மாவட்டச் செயலருமான பொன். வாசுகிராமுக்குச் சொந்தமான பூக்கொல்லை சாலையில் உள்ள வீடு, அமைச்சரின் உறவினரும், வழக்குரைஞருமான எஸ். உதயகுமாரின் மூன்றாம் தெரு வீடு என மொத்தம் 14 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

திருத்துறைப்பூண்டி கச்சேரி சாலையில் வசித்து வருபவர் த. நடேசன். ஓய்வுபெற்ற வேளாண் துறை துணை இயக்குநரான இவர், திவாகரனுக்கு நண்பராகவும், அவரது பண்ணை தொடர்பான தொழில்நுட்ப ஆலோசகராகவும் உள்ளார். இவரது வீட்டிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இரவிலும் சோதனை நீடித்தது. இதில், ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.

1999-இல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட ஜெயா தொலைக்காட்சியின் முதன்மைச் செயல் அதிகாரி விவேக் வீட்டில், வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, அவரது வீட்டின் மாடியில் உள்ள குடிநீர் தொட்டியிலும் அதிகாரிகள் இறங்கி ஆய்வு செய்தனர்.

சமையல் கூடம், கழிவறை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விவேக்கின் காரிலும் சோதனை நடத்தினர்.

தற்போது ஜெயா தொலைக்காட்சியை சசிகலாவின் மருமகன் விவேக் ஜெயகுமார், சிறையில் இருக்கும் இளராசியின் மகன் விவேக் நிர்வகித்து வருகிறார். இவர்தான் ஜாஸ் சினிமாவையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தனி உதவியாளரான பூங்குன்றனனின் சென்னை அடையாறு, நேரு நகரில் உள்ள வீட்டிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். போயஸ் கார்டன் வேதா நிலையத்துக்கு அருகே பூங்குன்றனின் பராமரிப்பில் உள்ள பழைய ஜெயா தொலைக்காட்சி அலுவலகக் கட்டடத்திலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஜெயலலிதா மறைவுக்கு முன்பு, அவரது தனி உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் தற்போது இவரது பராமரிப்பில்தான் உள்ளது.

தினகரன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட சென்ற சிறிது நேரத்திலேயே வீட்டிலிருந்து வெளியே வந்த தினகரன் செய்தியாளர்களிடம் பதற்றத்துடன் பேசினார். அப்போது, என்னுடைய சென்னை வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை. ஆனால் புதுச்சேரியில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றுள்ளார்களாம். அங்கு நானே 2 மாதத்துக்கு ஒருமுறைதான் போவேன். அங்கே போகும் அவர்களுக்கு சாணி, உரம்தான் கிடைக்கும். வேறு எதுவும் கிடைக்காது. இருந்தாலும் எதையாவது வைத்துவிட்டு பழிபோடுவார்கள் என்பதற்காக கட்சியினர் மற்றும் வழக்குரைஞர்களை அங்கே போக சொல்லியிருக்கிறேன் என கூறினார். 

ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் நடந்த அதிரடி சோதனையின் மூலம், சசிகலாவை "அரசியலில் இருந்து ஒதுக்குவதற்கான ஒரு சதி வேலை." 'இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. எங்களை ஒடுக்க வேண்டும் என்பதற்காக எனது வீடு மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது' இதுபோன்ற சோதனைகளால் எங்களை அரசிலில் இருந்து ஒதுக்கவும் முடியாது, நாங்கள் ஒதுங்கவும் மாட்டோம் என்று கூறினார்.

இந்நிலையில், போலி பெயர்களில் நிறுவனங்கள் தொடங்கி அவற்றில் கருப்பு பணத்தை முதலீடு செய்து வருமான வரி ஏய்ப்பு செய்வதை தடுத்து நிறுத்துவதற்கான அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. 

இந்தியா முழுவதும் இப்படி ஏராளமான போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு இருப்பதை சமீபத்தில் மத்திய அரசு கண்டுபிடித்தது. இதைத்தொடர்ந்து, அதிரடி சோதனை நடத்தி, வரி ஏய்ப்பு செய்தவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை வருமான வரித்துறையினர் தொடங்கி உள்ளனர். இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் கிளீன் மணி’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. 

இந்த ‘ஆபரேஷன் கிளீன் மணி’ நடவடிக்கையின் ஒரு பகுதியாகத்தான் சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார். 

வருமான வரித் துறையினர் இந்த சோதனைகளுக்கும் அரசியலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று ஒரு மூத்த வருமான வரித்துறை அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

"நாங்கள் ஷெல் நிறுவனங்களை வைத்திருந்த 10 வங்கிகளை அடையாளம் கண்டுள்ளோம், வங்கிகளில் பெரிய வைப்புகளை வைத்திருக்கிறோம். 187 இடங்களில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

டி.டி.வி.தனகரன் ஒரு வாரம் முன்னதாக இந்த சோதனைகளை நடைகள் எதிர்பார்த்திருந்ததுதான் என அதிமுக செய்தித் தொடர்பாளர் பிரசன்னா அழகர்சாமி தெரிவித்துள்ளார். இது பெங்களூரு சிறைச்சாலையில் சசிகலாவைச் சந்தித்த பின்னர் ஒரு சில நாளிலே நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், தினகரனுக்கு விசுவாசமான முன்னாள் போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, பெரம்பூர் எம்.எல்.ஏ. பி.வெற்றிவேல், அம்பத்தூர் எம்.எல்.ஏ. வி.அலெக்ஸாண்டர் மற்றும் தி.நகர் எம்.எல்.ஏ. பி.கலைராஜன் மற்றும் இதர தலைவர்கள் தினகரனை சந்தித்தினர். பின்னர் சோதனைக்குப் பிறகு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்படும். அதுகுறித்து செய்தியாளர்களுக்கு தகவல் அளிக்கப்படும் என தினகரன் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com