ம.பி இடைத்தேர்தல்: 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதி வெற்றி!

மத்தியபிரதேசம் மாநிலம் சித்ரகூட் பேரவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலான்ஷூ சதுர்வேதி 14

போபால்: மத்தியப்பிரதேசம் மாநிலம் சித்ரகூட் பேரவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலான்ஷூ சதுர்வேதி 14 ஆயிரத்து 333 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்ற மகத்தான வெற்றியின் மூலம் காங்கிரஸ் கட்சி மீண்டு எழுந்து வருவது தெளிவாகியுள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் சித்ரகூட் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரேம்சிங், உடல்நல குறைவால் மறைந்ததையடுத்து, சித்ரகூட் சட்டப்பேரவை தொகுதிக்கு நவம்பர் 9-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த வியாழக்கிழமை நடந்த இடைத்தேர்தலில் மொத்தம் 65 சதவீத வாக்குகள் பதிவாகின. 

காங்கிரஸ் தரப்பில் நிலான்ஷு சதுர்வேதி மற்றும் பாஜக சார்பில் சங்கர்லால் திரிபாதி உள்ளிட்ட 12 கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனாலும் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி சட்னா மாவட்டத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் சதுர்வேதி பாஜக வேட்பாளர் திரிவேதியை விட முன்னிலை வகித்து வந்தார். இறுதியில் பாஜக வேட்பாளர் திரிவேதி 52 ஆயிரத்து 677 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சதுர்வேதி 66 ஆயிரத்து 810 வாக்குகள் பெற்று 14 ஆயிரத்து 333 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் வேளையில், சிதரகூட் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

2013-இல் மூன்றாவது முறையாக மாநிலத்தில் ஆட்சியை பிடித்த பாஜகவின் ஊழல் மற்றும் திறமையற்ற நிர்வாகம் குறித்த விவகாரங்களை காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தின் போது எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் எல்லையோரம் அமைந்துள்ள இந்தத் தொகுதியில் மறைந்த காங்கிரஸ் வேட்பாளர் பிரேம் சிங், 1998, 2003, 2013-ஆம் ஆண்டுகளில்  நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கோட்டையாக இருந்த இந்த தொகுதியில் 2008-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் பாஜக கைப்பற்றியது. 

அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது மத்திய பாஜக அரசின் செல்வாக்கு சரிந்து வருவது தெளிவாகிறது. தொடர் தோல்விகளில் இருந்து காங்கிரஸ் கட்சி மீண்டு வருவதையும் உணர முடிகிறது. எதிர்வரும் குஜராத் மற்றும் ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்யும் என்பதற்கான முன்னோட்டமாக இந்த முடிவுகள் அமைந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com