அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியது எதற்காக தெரியுமா..?: ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்

"களத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினால்தானே அரசை பாராட்ட முடியும்” என்று கோவை மாவட்ட உயரதிகாரிகளுடனான நேரடி
அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியது எதற்காக தெரியுமா..?: ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்

கோவை: "களத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினால்தானே அரசை பாராட்ட முடியும்” என்று கோவை மாவட்ட உயரதிகாரிகளுடனான நேரடி ஆய்வுக் கூட்டம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் விளக்கம் அளித்துள்ளார். 

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை கோவை வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட உயரதிகாரிகளை மட்டும் நேரடியாக அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில்,  கோவை மாவட்டத்தில் செய்துள்ள வளர்ச்சி பணிகள் தற்போது செய்து வரும் பணிகள், இனிமேல் செய்ய உள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்தார். 

தமிழகத்தில் இதுவரை பதவி வகித்த எந்த ஆளுநரும் அரசு அதிகாரிகளை நேரடியாக அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தியதில்லை. 

இந்த நிலையில், கோவையில் அரசு அதிகாரிகளை அழைத்து மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆளுநர் ஆய்வில் ஈடுபட்டது தமிழக அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆளுநர் ஆய்வுக் கூட்டம் கூறித்து கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டறிந்தார். மாவட்டத்தின் வளர்ச்சி விவரம், உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான தகவல்களை மட்டுமே அவர் கேட்டறிந்தார். அதைத் தவிர வேறு எந்தவித ஆலோசனையும் நடைபெறவில்லை' என  தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், 2வது நாளாக இன்று காலை கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதிக்குச் சென்ற ஆளுநர் பன்வாரிலால், அங்கு தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்தார். 

மேலும், துடைப்பத்துடன் குப்பைகளை அள்ளி தூய்மைப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியின் போது உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் உடன் இருந்தார்.  

பின்னர், காந்திபுரத்தில் நடந்த தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பன்வாரிலால் பேசியதாவது: 
தென் இந்தியாவின் மான்செஸ்டரான கோவைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்த நகரம் மேலும் வளர்ச்சி அடையும். 

கோவை மாவட்டம் 89.23 சதவீதம் கல்வி அறிவு பெற்றுள்ளது. இது தேசிய சராசரியை விட அதிகமாகும். கோவை பேருந்து நிலையத்தில் சுகாதார பணிகள் மற்றும் கழிப்பறைகள் சிறப்பாக உள்ளன கொங்கு தமிழுடன் கோவை நகரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது என கோவை நகரை வெகுவாக பாராட்டினார். 

மேலும் அகமும் புறமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையே அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. தூய்மை இந்தியா திட்டத்தை குடிசைப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றவர் "களத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினால்தானே அரசை பாராட்ட முடியும்” என்று பன்வாரிலால் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com