ஜெயலலிதா இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனைக்கு யார் காரணம் தெரியுமா?: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைக்கு சசிகலா, தினகரன்
ஜெயலலிதா இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனைக்கு யார் காரணம் தெரியுமா?: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைக்கு சசிகலா, தினகரன் குடும்பம்தான் காரணம் என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.  

போலி நிறுவனங்களை நடத்தியது, அந்த நிறுவனங்கள் மூலம் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது, வரி ஏய்ப்பில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் அதிமுக அம்மா அணி பொதுச் செயலர் சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த 9-ஆம் தேதி சோதனையைத் தொடங்கினர்.

தொடர்ந்து ஐந்து நாள்கள் நடைபெற்ற இந்தச் சோதனை கடந்த திங்கள்கிழமை (நவ.13) முடிவுக்கு வந்தது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வுப் பணி நிறைவுபெற ஒரு மாதத்தைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது. மேலும் வருமான வரித் துறையினர் முதல் கட்டமாக நடத்திய ஆய்வில், ரூ.1,430 கோடிக்கான ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் சோதனையை தொடங்கினர். சோதனை இன்று அதிகாலை 2 மணியளவில் முடிவடைந்தது. 

சோதனை முடிவில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டு பென்டிரைவ், மடிக்கணினி, ஜெயலலிதாவிற்கு வந்த சில கடிதங்களை எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், போயஸ் தோட்ட நடந்த வருமான வரி சோதனை குறித்து எடப்பாடி அணியில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளார்களிடம் கூறியதாவது: 

அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் கோயிலாக விளங்கும் போயஸ் தோட்ட வேதா இல்லத்தில் நடந்த சோதனை கடும் வேதனை அளிக்கிறது. அதைபோல் ஜெயலலிதா அவர்கள் கரைபடாத கரங்கள் உடையவர்கள். இந்த சோதனையால் அவர்கள் மீது ஏற்பட்ட கலங்கம் துடைக்கப்படும் என்றார். 

இந்த வருமான வரி சோதனைக்கும் தமிழ அரசுக்கும் சம்பந்தம் இல்லை. அதேபோல் வருமானவரி சோதனை செய்பவர்கள் மாநில அரசிடம் அனுமதி பெறமாட்டார்கள் என்றார்

மேலும் ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த, வருமான வரித்துறைக்கு சோதனைக்கு சசிகலா, தினகரன் குடும்ப உறுப்பினர்கள் தான் காரணம் என்றும், அவர்களால்தான் இந்த அவப்பெயர் நிகழ்ந்துள்ளது என்று கூறினார்.

கடப்பாரையை விழுங்கிவிட்டு, சுக்கு கசாயம் குடித்து ஏப்பம் விடுவதில் தினகரன் கில்லாடி. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக முதல்வர், துணை முதல்வர் மீது குற்றம்சாட்டுகிறார் என ஜெயக்குமார் தெரிவித்தார். 

1996 டிசம்பரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் போயஸ் தோட்ட இல்லத்தில் சோதனை நடத்தினர். 21 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com