வேளாண் சார்ந்த தகவல்களுக்கு "உழவன் செயலி' விவசாயிகள் பயன்படுத்த அழைப்பு

வேளாண் சார்ந்த தகவல்களை வழங்கிடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள உழவன் செயலியை விவசாயிகள் பயன்படுத்த அழைப்பு

விழுப்புரம்: வேளாண் சார்ந்த தகவல்களை வழங்கிடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள உழவன் செயலியை விவசாயிகள் பயன்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டது. 

தமிழக அரசு சார்பில், விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த தகவல்களை செல்லிடப் பேசி மூலம் வழங்கும் வகையில் உழவன் செயலி (ஆப்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
இதன் மூலம்,  வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு தேவைப்படும் அனைத்து தகவல்களும் உடனுக்குடன் வழங்கப்படுகிறது. இந்தச் செயலியில்  வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் மாவட்ட,  வட்டார வாரியான பல்வேறு திட்டங்களின் விவரங்கள்,   மானியங்கள்,  விதை மற்றும் உரங்களின் இருப்பு, விளைபொருள் விற்பனை சந்தை நிலவரம்,  வானிலை போன்ற தகவல்களை மாநில அளவில் தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

தமிழக அரசு சார்பில் அண்மையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் குறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கி.செல்வராஜ் கூறியதாவது: 
இந்த செயலியை விவசாயிகள் தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் செயலி மூலம் 9 முக்கிய சேவைகள் குறித்த விவரங்களை தமிழ் மற்றும்  ஆங்கிலத்தில் பெற முடியும். 

விவசாயிகளுக்கான வேளாண் திட்டங்கள்,  மானியங்கள் குறித்த விவரங்களை அறியலாம். மானிய திட்டங்களைப் பெற முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் உண்டு. பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் பங்கேற்ற அனைத்து விவசாயிகளும், தங்களது பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண் அல்லது நில அளவை எண்ணைப் பயன்படுத்தி,  காப்பீடு செய்வது முதல் இழப்பீடு பெறுவது வரை தங்களது நிலை குறித்து விவரத்தை அறிய முடியும். 

தனியார் மற்றும் வேளாண் கூட்டுறவு வங்கிகளின் மூலம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள உரங்களின் இருப்பு விவரம், அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் ரகம் வாரியாக விதைகள் இருப்பு விவரம், விவசாயிகள் சாகுபடி செய்ய விரும்பும் பயிர் ரகம் தமிழகத்தில் எங்கு கிடைக்கிறது என்பன உள்ளிட்ட விவரங்களையும் அறியலாம்.  உழவு உள்ளிட்டப் பணிகளுக்கான அரசு வேளாண் இயந்திரங்களின் வாடகை மையங்கள் விவரம்,  தமிழகம் முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஏல முறை விற்பனையில் விளை பொருள்களின் விலை ஆகியவற்றையும் அறியலாம். 

வானிலையை அடிப்படையாகக் கொண்டு வேளாண் பணிகளை திட்டமிட ஏதுவாக,  அடுத்து வரும் 4 நாள்களுக்கான வானிலை விவரங்களை அறிய முடியும். மேலும், கிராம அளவிலான வேளாண் பணியாளர்களின் விவரங்கள்,  செல்லிடப்பேசி எண்கள்,  அவர்கள் வருகை குறித்த விவரங்களையும் இந்த செயலியில் பெற முடியும். இதனால்,  உழவன் செயலியை அனைத்து விவசாயிகளும் தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து, தங்களது இருப்பிடத்திலிருந்தே வேளாண் சார்ந்த விவரங்களை பெற்று பயன்பெறலாம் என்றார் அவர். 

வேளாண் அலுவலர்கள் விவசாயிகளை அணுகி, புதிய செயலி குறித்த விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com