பணப்பற்றாக்குறை விவகாரம்: நாட்டில் போதுமான அளவு பணம் புழக்கத்தில் உள்ளது - நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் 

நாட்டின் சில பகுதிகளில் உள்ள சில ஏடிஎம்களில் பணம் இருப்பதில்லை என்றும், சில இயங்குவதில்லை என்றும் அதனால் பணப்பற்றாக்குறை நிலவுகிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பணப்பற்றாக்குறை விவகாரம்: நாட்டில் போதுமான அளவு பணம் புழக்கத்தில் உள்ளது - நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் 

நாட்டின் சில பகுதிகளில் உள்ள சில ஏடிஎம்களில் பணம் இருப்பதில்லை என்றும், சில இயங்குவதில்லை என்றும் அதனால் பணப்பற்றாக்குறை நிலவுகிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நாட்டில் போதுமான அளவு பணம் புழக்கத்தில் உள்ளது. சில பகுதிகளில் தேவையின் காரணமாக அதிகளவில் பணம் எடுக்கப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார். 

கடந்த 3 மாதங்களில் இயல்புக்கு மாறாக நாட்டில் பணத்தின் தேவை திடீரென அதிகரித்துள்ளது. நடப்பு மாதத்தில், முதல் 13 நாட்களில் பண வழங்கல் ரூ.45,000 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது.  இந்தத் திடீர் தேவை ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பீகார் போன்ற சில பகுதிகளில் காணப்படுகிறது.

வழக்கத்திற்கு மாறான இந்தத் தேவையைச் சமாளிக்க மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இதுவரை ஏற்பட்ட அசாதாரணத் தேவைகளை முழுமையாகச் சமாளிக்கும்வகையிலான, போதுமான கரன்ஸி நோட்டுக்கள் கையிருப்பில் உள்ளது. எந்த நிலையையும் சமாளிக்கும் வகையில், ரூ.500, ரூ.200, ரூ.100 உட்பட அனைத்துப் பிரிவு கரன்ஸி நோட்டுகளும் போதுமான அளவில் தொடர்ந்து கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை உள்ள தேவைகளை சமாளித்தது போல, போதுமான அளவுக்கு கரன்ஸி நோட்டுக்களை விநியோகம் செய்யும் வகையில், கையிருப்பு உள்ளது என்று அனைத்து மக்களுக்கும் மத்திய அரசு உறுதியளிக்கிறது. மேலும் அதிகத் தேவை ஏற்பட்டு, நாட்கணக்கில், மாதக்கணக்கில் அந்தத் தேவை தொடருமானால், அதையும் சமாளிக்கும்வகையில் போதுமான கரன்ஸி நோட்டுக்கள் விநியோகிக்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதி அளிக்கிறது.

அனைத்து ஏடிஎம்களிலும் பண விநியோகத்தை உறுதிசெய்யவும், இயங்காத ஏடிஎம்களை வெகுவிரைவில் இயல்பாக இயங்கச் செய்யவும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. என்று தெரிவித்துள்ளார். 

மேலும்  இதற்கு விளக்கம் அளித்து இருந்த நிதித்துறை இணை அமைச்சர் எஸ்பி சுக்லா, ‘’தற்போது நம்மிடம் ரூ. 1,25,000 கோடி உள்ளது. சில மாநிலங்களில் அதிகப் பணமும், சில மாநிலங்களில் குறைந்த பணமும் உள்ளது. பணம் உள்ள மாநிலங்களில் இருந்து பணம் இல்லாத மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மாநில அளவில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆர்பிஐ-யும் பணம் கொண்டு செல்வதற்கு கமிட்டி அமைத்துள்ளது. மூன்று நாட்களில் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்’’ என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com