ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காத மத்திய அரசை கண்டித்து சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்!

மத்திய அரசு, ஆந்திரத்துக்கு அநீதி இழைத்ததைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை காலை உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காத மத்திய அரசை கண்டித்து சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்!

விஜயவாடா:  மத்திய அரசு, ஆந்திரத்துக்கு அநீதி இழைத்ததைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை காலை உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.
 
ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிந்து தெலங்கானா மாநிலம் உதயமான போது ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மத்திய அரசு ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து தரமுடியாது. அதற்கு பதிலாக சிறப்பு நிதி அளிக்கப்படும் என்று தெரிவித்தது. அதை ஏற்றுக்கொள்ளாத ஆந்திர மக்கள் மாநில சிறப்பு அந்தஸ்து கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.

மேலும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தராததற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சி மத்திய பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. 2 மத்திய அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

இதனிடையே ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காத மத்திய அரசைக் கண்டித்து, தனது பிறந்தநாளான இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 20) உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

மேலும் மத்திய அரசு, ஆந்திரத்துக்கு அநீதி இழைத்ததைக் கண்டித்து தான் மேற்கொள்ளும் உண்ணாவிரதத்தில் தனது கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி இருந்தார். 

இது தவிர, ஆந்திரத்தில் நமது அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் வகையில் வரும் 21-ஆம் தேதி சைக்கிள் பேரணி நடத்த வேண்டும் என்றார்.

இந்நிலையில், மத்திய அரசு, ஆந்திரத்துக்கு அநீதி இழைத்ததைக் கண்டித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று 12 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார். 

உண்ணாவிரத போராட்டம் விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி முனிசிபல் ஸ்டேடியத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த போராட்டத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள், மாணவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் போராட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com