இனி அணு ஆயுத சோதனை இல்லை: வட கொரியா அதிபர் கிம் ஜோங் அறிவிப்பு

இனி அணு ஆயுதங்கள், ஏவுகணை சோதனைகள் நடைபெறாது என அறிவித்துள்ளதோடு அதன் அணு சோதனைத் தளத்தை மூடவுள்ளதாகவும்
இனி அணு ஆயுத சோதனை இல்லை: வட கொரியா அதிபர் கிம் ஜோங் அறிவிப்பு

சியோல்: இனி அணு ஆயுதங்கள், ஏவுகணை சோதனைகள் நடைபெறாது என அறிவித்துள்ளதோடு அதன் அணு சோதனைத் தளத்தை மூடவுள்ளதாகவும் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளார்.  

சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா. தடையையும் மீறி அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளைப் பரிசோதித்து வந்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து வட கொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதாரத் தடைகளை விதித்தன

இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் விருப்பம் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து வட கொரியா, தென் கொரியா இடையே பதற்றம் குறைந்து அமைதியான சூழல் தற்போது உண்டாகியுள்ளது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜோங்கை முதல்முறையாக இன்னும் சில வாரங்களுக்குள் நேரடியாக சந்தித்து பேச திட்டமிடப்பட்டுள்ளனர். இருவரது சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.  

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, வட கொரிய அதிபர் கிம் ஜோங்கை இன்னும் சில வாரங்களுக்குள் நேரடியாக சந்தித்து, அந்த நாடு அணு ஆயுதங்களைக் கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவேன். அந்தப் பேச்சுவார்த்தையில் பலன் எதுவும் கிடைக்காதைப் போல் தோன்றினால், அத்தகையப் பேச்சுவார்த்தை நடக்க வேண்டிய அவசியமே இல்லை. எனவே, அத்தகைய சூழல் ஏற்பட்டால் பேச்சுவார்த்தையை பாதியிலேயே முடித்துக் கொண்டு வெளியேறி விடுவேன். அதற்குப் பிறகு, வட கொரியா விவகாரத்தில் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறோமே, அந்த நடவடிக்கையைத் தொடர்வோம் டிரம்ப் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அணு ஆயுத சோதனை, பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் தொலை தூரம் தாக்கும் ஏவுகணை சோதனையை நிறுத்துவதாக அறிவித்துள்ள வட கொரியா,  அணு ஆயுத சோதனை முற்றிலும் நிறுத்தப்படுவதுடன் அணு ஆயுத சோதனை தளத்தை மூடவுள்ளதாகவும் அதிபர் கிம் ஜாங் உன் இன்று அறிவித்துள்ளார்.  

வட கொரியாவின் போக்கு உலகப் போருக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் கவலை கொண்ட நிலையில், அணு ஆயுத சோதனையை நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிம் ஜாங் உன்னின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வட கொரியா கடந்த ஆண்டு தனது ஆறாவது அணு சோதனை நடத்தியது. இதுவரை நடத்திய சோதனையிலேயே மிக சக்தி வாய்ந்ததாகவும் இருந்தது. அமெரிக்காவின் முக்கிய பகுதியை அடைவதற்கான ஏவுகணைகளையும் வட கொரியா ஏவியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com