திருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து: வைகோ அறிக்கை 

பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள மே பதினெழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து
திருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து: வைகோ அறிக்கை 


பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள மே பதினெழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டும், மற்றும் 8 வழிச்சாலை விவகாரங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி தனது கருத்தை பதிவு செய்துவிட்டு இன்று அதிகாலை பெங்களூர் விமான நிலையம் வந்திறங்கியவரை, விமான நிலைய போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாகக் கூறி கைது செய்துள்ளனர். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ”தமிழக வாழ்வாதாரங்களையும், சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்காகவும், ஈழத்தமிழர் இனப்படுகொலையை உலக அரங்கில் வெளிப்படுத்தவும், அறவழியில் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிற மே பதினெழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் தனது கருத்தை அண்மையில் பதிவு செய்ததில் எந்தத் தவறும் கிடையாது. உலகத்தில் ஒவ்வொரு நாட்டிலும் இப்படி நடைபெறுகிற படுகொலைகள் மனித உரிமைக் கவுன்சிலில் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், திருமுருகன் காந்தியை எவ்விதத்திலாவது நிரந்தரமாக முடக்கிவிட வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டு, காவல்துறையை ஏவி அவரைக் கைது செய்வதும், குண்டர் சட்டத்தைப் பயன்படுத்துவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

திருமுருகன் காந்தியின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தினாலும், கவலையினாலும் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, சோசியல் டெமாரக்டிக் கட்சி, தமிழ் அமைப்புக்கள் அனைவரோடும் இணைந்து மறுமலர்ச்சி திமுகழகம் மாபெரும் அறப்போராட்டத்தை நடத்தியது. 

பாசிச வெறியாட்டம் போடும் மத்திய அரசும், அதற்குக் குற்றேவல் செய்யும் தமிழக அரசும் திருமுருகன் காந்தியின் குரலை ஒடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு உள்ளன. அதன் விளைவாகத்தான் கர்நாடக காவல்துறையைப் பயன்படுத்தி பெங்களூருவில் கைது செய்துள்ளனர். இதற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய்ய உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்”  என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com