அழகிரி உடனான உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும்: ஜெ.அன்பழகன் பரபரப்பு பேச்சு

குடும்பமா, கழகமா என்ற கேள்வி வந்தபோது கழகம்தான் முக்கியம் என கூறிய கருணாநிதி வழியில் ஸ்டாலின்
அழகிரி உடனான உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும்: ஜெ.அன்பழகன் பரபரப்பு பேச்சு


திமுக தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் மூலம் பார்க்கப்போகிறோம்’ என்று ஜெ.அன்பழகன், அழகிரி உடனான உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும் என பேச்சில் மறைமுகமாக சாடினார். 

திமுக செயற்குழுக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானமாக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி, கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் அனைவரும் என் பக்கம்தான் உள்ளனர் என்று போர்க்கொடி தூக்கியுள்ள உள்ள பரபரப்பான சூழலில், கூடிய திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டத்தில் அண்ணன் அழகிரியின் பேச்சுக்கு, செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு ஸ்டாலின் பதில் அளிப்பார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அழகிரியின் பேச்சு குறித்து எந்தவிதத்திலும் தொடாமலே, ஸ்டாலின் தனது பேச்சை முடித்துக்கொண்டது சிறப்பு.

இரங்கல் தீர்மானத்துக்குப் பிறகு பேசிய சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், துறைமுகம் தொகுதி பேரவை உறுப்பினருமான ஜெ. அன்பழகன், 60 ஆண்டு காலம் நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாகவும், 80 ஆண்டுக்காலம் தன்னைப் பொதுவாழ்வில் அர்ப்பணித்துக் கொண்டவர். இந்திய அரசியலின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர். நம்மை தவிக்கவைத்துவிட்டுச் சென்றுவிட்டார் என்றார்.

கடந்த ஒன்றரை ஆண்டாக கருணாநிதியின் குரல் ஒலிக்காத நிலையில், கருணாநிதியின் குரலாக செயல் தலைவர் ஸ்டாலின் குரல் ஒலித்தது. அதுவே, நாம் அனைவருக்கும் ஆறுதலாக இருந்தநிலையில், கருணாநிதி இல்லாமல் இனி எப்படி வாழப்போகிறோம் என்று தெரியவில்லை. 

நமக்கு இணை எதிரிகள் ஏராளமானோர் இருக்கும் நிலையில், அதை நாம் எப்படி முறியடிக்கப்போகிறோம்? அறிஞர் அண்ணா கூறியதுபோல் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று இருக்க வேண்டும். அதிலும் கட்டுப்பாடு தற்போது மிகவும் அவசியம். நமது செயல் தலைவர் நாம் எப்படி கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்று நம்மை வழிநடத்தி வருகிறார். 

யாரெல்லாம் நமக்கு மெரீனாவில் இடம் தரமாட்டோம் என்று சொன்னார்களோ அவர்களுக்கு இனி தமிழ்நாட்டிலேயே இடமில்லை என்கிற அளவுக்கு நாம் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டிய காலத்தில் உள்ளோம். மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க முடியாது என்று ஆளும் அரசு சொன்னபோது, லட்சக்கணக்கான தொண்டர்கள் உணர்ச்சிப்பெருக்கில் எந்த அசம்பாவிதங்களும் நிகழ்ந்துவிடாமல் வழிநடத்தியவர் செயல் தலைவர் ஸ்டாலின். அவரின் அணுகுமுறையும் கட்டுப்பாடும் அனைவரையும் ஈர்த்தது. நமது செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைவராக வரப்போகிறவர். 

திமுக தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் மூலம் பார்க்கப்போகிறோம். கலங்க தேவையில்லை. வருத்தங்களை எல்லாம் தாண்டி நாம் பயணிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. உங்களிடம் நான் மன்றாடிட கேட்பதெல்லாம் தலைவர் கருணாநிதி காட்டிய வழியில் செல்ல வேண்டும். குடும்பமா, கழகமா என்ற கேள்வி வந்தபோது கழகம்தான் முக்கியம் என கூறிய கருணாநிதி வழியில் ஸ்டாலின் செயல்பட வேண்டும் என்றும் திராவிட இயக்கங்களை அழிக்கக்கூடிய யாராக இருந்தாலும் அவர்களோடு உறவு வைக்க தேவையில்லை. நமக்கு எதிராகச் செயல்படும் அந்த உறவை (அழகிரி) செயல் தலைவர் ஸ்டாலின் துண்டிக்க வேண்டும். நிச்சயமாக செய்வீர்கள். உங்கள் பின்னால் நாங்களெல்லாம் இருக்கிறோம் என்று தனது பேச்சின்போது மறைமுகமாக அழகிரியை தாக்கி ஜெ.அன்பழகன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி, கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் அனைவரும் என் பக்கம்தான் உள்ளனர் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com