அண்டை நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தானுக்கு அருகில் இருக்கும் நாடுகளுடனான உறவை மேம்படுத்த பாகிஸ்தான் தயாராக உள்ளதாக பாகிஸ்தானில் புதிதாக
அண்டை நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

 
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு அருகில் இருக்கும் நாடுகளுடனான உறவை மேம்படுத்த பாகிஸ்தான் தயாராக உள்ளதாக பாகிஸ்தானில் புதிதாக ஆட்சியமைத்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த ஜூலை மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் இம்ரானின் பிடிஐ கட்சி 116 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது.

அந்தக் கட்சிக்கு அடுத்தபடியாக, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 64 இடங்களையும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களையும் கைப்பற்றின. இந்தச் சூழலில் சிறிய கட்சிகள், சுயேச்சைகள், நியமன எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் இம்ரான் கான் இறங்கினார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) (பிஎம்எல்-என்) கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷெரீஃபை விட 80 வாக்குகள் அதிகம் பெற்று இம்ரான் கான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து, பாகிஸ்தானின் 22-ஆவது பிரதமராக அவர் கடந்த 18-ஆம் தேதி சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

பாகிஸ்தான் வரலாற்றில், ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடைபெறுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவர் பதவியேற்ற பிறகு நேற்று முதல்முறையாக அந்நாட்டு ஊடகங்கள் வழியாக மக்களிடம் பேசினார். 

அப்போது, “அண்டை நாடுகளுடனான உறவை பலப்படுத்தவே பாகிஸ்தான் விரும்புவதாக தெரிவித்த இம்ரான் கான், பாகிஸ்தானில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்றார். 

பாகிஸ்தானில் ஊழல் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும் என உறுதி அளித்தார். மக்களின் வரிப் பணம் அவர்களின் நலனுக்காக மட்டுமே செலவழிக்கப்படும். உங்களின் பணம் முற்றிலும் பாதுகாக்கப்படும் என நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன். நாங்கள் தினமும் எவ்வளவு பணம் சேமித்து வைத்திருக்கிறோம் என்பதை இனி மக்களுக்கு தெரிவிப்போம். 


பாகிஸ்தான் வரலாற்றிலேயே இப்படி ஒரு கடன் சுமையை யாரும் கண்டதில்லை. கடந்தகால ஆட்சியாளர்கள் 10 ஆண்டுகளில் நாட்டிற்கு 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன்சுமையை விட்டுச் சென்றுள்ளதாக குற்றம் சாட்டியவர், கடனைத் திருப்பி செலுத்தவே மேலும் மேலும் கடன் வாங்க வேண்டிய நிலையில் தற்போது பாகிஸ்தான் அரசு உள்ளது. நாட்டைச் சூறையாடியவர்களை என்றும் விட்டுவைக்கப் போவதில்லை” எனக் கூறினார்.

பிரதமர் இல்லத்தில் ஆளுநர் மாளிகைகள் உள்ளன. அங்கு ஆடம்பரங்கள் தலைவிரித்தாடுகின்றன. நமது மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு செலவிட பணம் இல்லை. அதே நேரத்தில் நம்மை ஆள்பவர்கள் வாழ்வதற்காக பணம் செலவழிக்கப்படுகிறது.

இத்தகைய நிலை இருந்தால் மக்கள் எப்படி வாழமுடியும். பிரதமர்களின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்துக்கு ரூ.65 கோடி செலவிடப்பட்டுள்ளது. சபாநாயகரின் செலவுக்கு மட்டும் பட்ஜெட்டில் ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தகைய செலவினங்களை குறைக்க திட்டமிடப்படும்.

பான்சுலாவில் உள்ள எனது வீட்டில் தான் தங்க நினைத்தேன். ஆனால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாதுகாப்பு துறை தெரிவித்தை அடுத்து இஸ்லாமாபாத்தில் 3 படுக்கை அறை கொண்ட ராணுவ செயலாளர் வீட்டில் தங்க உள்ளேன். 2 கார்களை மட்டுமே பயன்படுத்துவேன். பிரதமர் அலுவலகத்தில் உள்ள 33 புல்லட் புரூப் கார்கள் அனைத்தும் ஏலம் விடப்படும். அதில் கிடைக்கும் பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். ஆளுநர் மாளிகைகள் அனைத்தும் எளிமையாக்கப்படும். பிரதமர் இல்லம் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக மாற்றப்படும்.

மேலும், பாகிஸ்தானில் கல்வியின் நிலை குறித்து கருத்து தெரிவித்த இம்ரான் கான், அரசாங்க பள்ளிகள் மோசமான நிலையில் இருப்பதாகவும், சுமார் 1,50,000 குழந்தைகள் கோபர் பேக்ட்குவா மாகாணத்தில் உள்ள அரசாங்க பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பள்ளிகளை முன்னுரிமை அடிப்படையில் சீரமைக்கும் என்று கூறினார்.

கர்ப்பிணிப்பெண்கள் உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாகவும், நாட்டின் 45 சதவீத குழந்தைகளுக்கு உரிய பராமரிப்பு வழங்கப்படவில்லை என்றவர் தனது அரசாங்கம் ஒரு நாடு முழுவதும் தூய்மையான இயக்கத்தை துவங்க உள்ளதாகவும், காலநிலை மாற்றங்களை சமாளிக்க ஒரு பில்லியன் மரக்கன்றுகள் நடப்படும். 

விளையாட்டுத்துறையில் இளைஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவோம், விளையாட்டு மைதானம் கட்டித்தரப்படும், இளம் இளைஞர்களுக்கு திறமையான பயிற்சிகள் வழங்கப்படும். இளம் தொழில்முனைவோருக்கு ஊக்கம் மற்றும் உதவி அளிக்கும் வகையில் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றார்.  

நாடு முழுவதும் செய்யப்படும் தேவையில்லை செலவை குறைக்க டாக்டர் இஷ்ரத் உசேன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு பணம் மக்கள் நலனுக்காக செலவிடப்பட வேண்டும் என்பதில் எனது தலைமையிலான அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com