வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கான நிவாரண நிதி ரூ.1,027 கோடியாக உயர்வு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கான நிவாரணத்துக்கான நிவாரண நிதி ரூ.1027 கோடியாக உயர்ந்துள்ளது. 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கான நிவாரண நிதி ரூ.1,027 கோடியாக உயர்வு


திருவனந்தபுரம்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கான நிவாரணத்துக்கான நிவாரண நிதி ரூ.1027 கோடியாக உயர்ந்துள்ளது. 

கேரளத்தில் மே 28-ஆம் தேதி தொடங்கிய பருவமழை மற்றும் அதன் வெள்ள பாதிப்புகளால் 483 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காணாமல் போயினர். மாநிலத்தின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சேதத்தின் மதிப்பு, மாநிலத்தின் ஆண்டுத் திட்டத்துக்காக மதிப்பிடப்பட்டுள்ள தொகையைக் காட்டிலும் (சுமார் ரூ.37,247 கோடி) அதிகமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

எதிர்பாராத அளவு மழையின் காரணமாகவே இந்தப் பேரிழப்பு ஏற்பட்டது. ஆகஸ்ட் 9 முதல் 15 வரையிலான காலகட்டத்தில் மழையின் அளவு 98.5 மி.மீ.-ஆக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்தது. ஆனால், அதைவிட 3 மடங்கு அதிகமாக, 352.2 மி.மீ. மழை பதிவானது.

சுமார் 57 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், வெள்ள நீர் சூழ்ந்ததால் 14.50 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். 

100 ஆண்டுகளில் வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் உருக்குலைந்த கேரளத்துக்கு மத்திய அரசு நிவாரண உதவியாக இதுவரை ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளது. மேலும் கூடுதலாக மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த  29-ஆம் தேதி வரையில் கேரள முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.730 கோடி நிதியுதவி கிடைத்துள்ளது. அதுதவிர, நிலம் மற்றும் நகைகளாகவும் முதல்வர் நிதிக்கு பங்களிப்புகள் கிடைத்துள்ளன. 

இதனிடையே மாநிலத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கு தேவையான நிதியை திரட்டுவது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

கேரளத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி குழுவினர் தில்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று வியாழக்கிழமை சந்தித்து, கேரளத்தை மறுசீரமைக்க வேண்டும் என்ற நோக்கில் கட்சி வேறுபாடுகளை கடந்த நாங்கள் இணைந்துள்ளோம். கேரளத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். மேலும், கேரளத்துக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதற்கு உள்ள தடையை நீக்குமாறு உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். 

மழை வெள்ளத்தால் உருக்குலைந்த கேரளத்துக்கு பல்வேறு வெளி நாடுகளும் நிவாரண நிதியை அறிவித்தன. எனினும், வெளிநாட்டு நிவாரண நிதியை பெறுவதில்லை என்ற கொள்கையை இந்திய அரசு கடைப்பிடிப்பதால், அந்தத் தொகையை மத்திய அரசு பெறவில்லை.

இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கான நிவாரண நிதி ரூ.1027 கோடியாக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதில், பல்வேறு வங்கிகள் மூலம் ரூ.145 கோடி வரையில் பல்வேறு வங்கிகளின் மூலம் பெறப்பட்டுள்ளன. இதில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கிகள் மூலம் அதிகயளவில் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசோலைகள் மூலமாக ரூ.185 கோடி பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com