போரூர் சிறுமி ஹாசினி கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு

சிறுமியின் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தி சிறுமி வெளியில் சொல்லிவிட கூடாது என்பதற்காக அவரை கொலை செய்து
போரூர் சிறுமி ஹாசினி கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: போரூர் சிறுமி ஹாசினி கொலை செய்யப்பட்ட வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னைப் போரூரை அடுத்த மெளலிவாக்கம் மாதா நகரில் வசிக்கும் பாபு(35), ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஹாசினியை(6) கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்டார். குடியிருப்புக்கு அருகே இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸாருடன் சேர்ந்து சிறுமியை தேடுவது போல் நடித்த அதே குடியிருப்பில் வசித்த தஷ்வந்த்(22) என்ற இளைஞர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட, அவரைப் பிடித்து விசாரித்தனர். 

சிறுமியின் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தி சிறுமி வெளியில் சொல்லிவிட கூடாது என்பதற்காக அவரை கொலை செய்து தீயிட்டு கொளுத்தி புறவழிச்சாலையோரம் புதரில் வீசியதை தஷ்வந்த் ஒப்புகொண்டான். பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொடூர கொலையை செய்த தஷ்வந்தை கடுமையாக தண்டிக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை எழுப்பினர்.

இதையடுத்து இந்த வழக்கில் தஷ்வந்தை குண்டர் தடுப்பு காவலில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் 90 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததாலும், வழக்காடுவதில் கோட்டை விட்டதால் குண்டர் தடுப்பு காவலும் உடைந்து தஷ்வந்த் ஜாமீனில் வெளியே வந்தார். 

ஜாமீனில் வெளியே வந்தபோது கடந்த ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி தனது தாயார் சரளாவை அடித்துக் கொலை செய்துவிட்டு அவர் கழுத்திலிருந்த 25 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றார். அவரை தனிப்படை போலீஸார் மும்பையில் கைது செய்தபோது, போலீஸாரின் பிடியில் இருந்து தப்பினான். அவனை, மீண்டும் மும்பை போலீஸாரின் உதவியுடன் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது தாயார் சரளாவை அடித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டார். 

மேலும், பறித்துச் சென்ற நகைகளை விற்றுத்தர செங்குன்றத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை அணுகியதாகவும், ஆனால் அவர் நகைகளுடன் தலைமறைவாகி விட்டதாவும், பின்னர் தனது நண்பர் டேவிட் கொடுத்த ரூ.40 ஆயிரம் பணத்துடன் மும்பை சென்றதாகவும் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இதையடுத்து, தலைமறைவான மணிகண்டனைப் பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், மணிகண்டன் சென்னை தியாகராய நகரிலுள்ள நண்பர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில், தியாகராய நகர் பகுதிக்கு சனிக்கிழமை நள்ளிரவு சென்ற போலீஸார், அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த மணிகண்டனை கைது செய்து, 25 பவுன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

இந்த கொலை வழக்கு செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும், ஹாசினி கொலை வழக்கு மகிளா நீதிமன்றத்திலும் விசாரணைக்கு வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல வந்த ஹாசினியின் தந்தை பாபுவை சாட்சி சொல்லக் கூடாது என தஷ்வந்த் மிரட்டியதாக செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. டிசம்பர் 2-ஆம் தேதி வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதன் பிறகு இனியும் தஷ்வந்த் தப்பக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த காவல் துறையினர், சிறுமி கொலை வழக்கில் சாட்சிகளை ஆஜர்படுத்தி வழக்கை துரிதப்படுத்தினர். ஹாசினி கொலை வழக்கு விசாரணைக்காக மகிளா நீதிமன்றத்தில் தஷ்வந்த் ஆஜர்படுத்தினர். மகிளா நீதிமன்றக் கதவுகள் மூடப்பட்டு, தஷ்வந்த் மற்றும் சாட்சிகளான ஹாசினியின் தந்தை பாபு, தாய் ஸ்ரீதேவி, பக்கத்து வீட்டுக்காரர் முருகன் ஆகியோரிடம் நீதிபதி வேல்முருகன் ரகசிய விசாரணை நடத்தினார். 

35 சாட்சிகளிடம் நடைபெற்ற விசாரணை கடந்த வாரம் (பிப்.14) முடிவடைந்த இந்த வழக்கில் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு வழங்குகிறார்.

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் சார்பில் வழக்குரைஞர்கள் யாரும் ஆஜராகாததால், தஷ்வந்தே வாதாடினான். இந்நிலையில், இன்று திங்கள்கிழமை(பிப்.19) காலை 10 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதையடுத்து நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீர்பிப்பில் ஷ்வந்த்துக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com