கோயில்களில் நெய் தீபம் விற்க தடை: பக்தர்கள் அதிர்ச்சி 

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து எதிரொலியாக, பாதுகாப்பு கருதி கோயில் வளாகத்தில் நெய், தீபம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோயில்களில் நெய் தீபம் விற்க தடை: பக்தர்கள் அதிர்ச்சி 

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து எதிரொலியாக, பாதுகாப்பு கருதி கோயில் வளாகத்தில் நெய், தீபம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு ராஜகோபுரம் பகுதியில் உள்ள கடைகளில் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.2) இரவு தீப்பிடித்ததில் 20 கடைகள் தீயில் எரிந்து சேதமடைந்ததுடன், அங்குள்ள வீர வசந்தராயர் மண்டபமும் சேதமடைந்தது. மண்டபத்தின் மேற்கூரை மற்றும் பசுபதீஸ்வரர் சந்நிதியின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. தீ விபத்துத் தொடர்பாக கோயில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதுடன், தனிப்படை அமைத்தும் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோயிலில் தீ விபத்து நடந்தபோது அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸார் ஆய்வு நடத்தினர். இதில் வெள்ளிக்கிழமை இரவு ஆயிரங்கால் மண்டபம் நந்தி சிலை எதிரே முருகபாண்டி என்பவருக்கு சொந்தமான கடை முன் சூடம் ஏற்றப்படுவதும், திருஷ்டி கழிப்பதும், அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் முருகபாண்டியின் கடையில் இருந்து புகை வருவதும் பதிவாகி இருந்தது.

இதையடுத்து கடை உரிமையாளர் முருகபாண்டி, ஊழியர் கருப்பசாமி உள்பட மூவரை கோயில் போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோவிலுக்குள் இருக்கும் கடைகள் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, கோயிலுக்குள் இருக்கும் கடைகளை அகற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கடைகள் அகற்றப்பட்டன.

இதே போல் கும்பகோணம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயலில் கருவறையிலும் தீ விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில், கோயலில்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி, கோயில் வளாகத்தில், தீத்தடுப்பு கருவிகள் பொருத்த வேண்டும் என்றும், தீ விபத்துக்களை தடுக்க கோயில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோயில்களில், பாதுகாப்பு அம்சங்களுடன் ஒரு அணையாத தீபம் அமைக்க வேண்டும். பக்தர்கள் கொண்டு வரும் நெய், எண்ணெயை ஊற்ற, சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். 

மேலும், கோயில்களில் பல இடங்களில், தூண்களில் பக்தர்கள் எண்ணெய், நெய் தீபம் ஏற்றுவதால், அது அந்த தூண்களில் எண்ணெய் படிந்து அசுத்தமாகிறது. தீ விபத்துக்கு வழிவகுப்பதாகவும், எனவே பாதுகாப்பு கருதி கோயில் வளாகத்தில் நெய், தீபம் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும். 

மின் கசிவால் விபத்து ஏற்படாத வகையில், 'வயரிங்' மற்றும் மின் சாதனங்களை ஆய்வு செய்து, புதுப்பிக்க வேண்டும். கோயில் வளாகம் முழுவதும் தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று, அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com