அரசியலில் அரிதாரம் பூசிய பலூன்கள் வெடித்துச் சிதறும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு 

நல்லவர்களின் வேஷம் விரைவில் கலைந்து விடும்; அரசியல் வானில் அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் புதிது புதிதாக பறக்க தொடங்கி உள்ளன.
அரசியலில் அரிதாரம் பூசிய பலூன்கள் வெடித்துச் சிதறும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு 

சென்னை: அரசியல் வானில் பறக்கும் அரிதாரம் பூசிய பலூன்கள் வெடித்துச் சிதறும் என அரசியல் களத்திற்கு வந்துள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறைமுகமாக விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலையை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆகியோர் திறந்து வைத்தனர். ஜெயலலிதா சிலையை வடிவமைத்த பிரசாத் என்பவருக்கு முதல்வர் பழனிசாமி, தங்க மோதிரம் அணிவித்து கெளரவித்தார். 

இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், அரசியலுக்கு வந்துள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்து பேசினார்.

அதிமுக ஆட்சியை நடத்துவது ஜெயலலிதா, கட்சியை நடத்துவது தொண்டர்கள் என்று பெருமிதம் கொண்டார். ஒரு விரல் எம்ஜிஆர், மறு விரல் ஜெயலலிதா என வாழ்ந்து வருகிறோம்.அதிமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ந்திருக்கிறார்கள், பாதுகாப்பாக இருக்கிறார்கள். மக்களின் இதயத்தில், இல்லத்தில் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து வருகிறார்கள். சொன்னதை செய்கின்ற, சொல்லாததையும் செய்கின்ற ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சி. ஆட்சியையும் , இயக்கத்தையும் நடத்துபவர் நாங்கள் அல்ல, ஜெயலலிதா நடத்துகிறார் 

அரிதாரம் பூசிய சிலர் மக்களை காக்க வந்த ரட்சகர்கள் போல வீரவசனம் பேசுகின்றனர். மக்களை காப்பாற்றப் போவது நாங்கள் தான் என்பவர்களின் பேச்சு விரைவில் புஸ்வாணமாகும்

நல்லவர்களின் வேஷம் விரைவில் கலைந்து விடும்; அரசியல் வானில் அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் புதிது புதிதாக பறக்க தொடங்கி உள்ளன. அவை பார்க்க அழகாக இருந்தாலும், அவை வெடித்து சிதறுவதை நம் கண்முன்னே பார்க்கத்தான் போகிறோம்.

ஜெயலலிதா உயிரோடு இல்லாத சூழலில் எதிரிகளும் துரோகிகளும் சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள். அதிமுகவை வெல்ல நினைத்தவர்களின் கட்சிகள் எல்லாம் காற்றில்லாத பலூன்களாக சுருங்கி கிடக்கின்றன. 

அதிமுகவின் வெற்றியை தடுக்கவும் இடையில் புகுந்து களவாடவும் சிலர் சதி செய்கின்றனர். அவர்களின் வஞ்சக வலையை அறுத்தெறிந்து கட்சியையும் ஆட்சியையும் ஒற்றுமையாக கட்டிக் காப்போம். எத்தனை தேர்தல்கள் வந்தாலும் அது எப்போது வந்தாலும் அதனை எதிர்கொண்டு வெற்றி காண்போம். 

அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்; ஆனால் அவை வெடித்து சிதறுவதை நம் கண்முன்னே பார்க்கதான் போகிறோம் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com