அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: இந்த ஆண்டும் முதல் பரிசை வென்றார் முடக்கத்தான் மணி

ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறப்பாக மாடுகளைப் பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளுக்கும் ஏராளமான பரிசுகள்..
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: இந்த ஆண்டும் முதல் பரிசை வென்றார் முடக்கத்தான் மணி

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் இந்த ஆண்டும் முதல் பரிசை வென்றார் முடக்கத்தான் மணி.  

பொங்கல் விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 924 காளைகளும், 624 மாடுபிடி வீரர்களும் தங்களது பெயர்களை சனிக்கிழமை பதிவு செய்தனர். 

இதையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை 678 காளைகள் மட்டுமே களத்திற்கு கொண்டுவரப்பட்டன. அந்த காளைகளுக்கு காலை 6 மணி முதல் 10க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினர் உடல் தகுதி பரிசோதனை செய்தனர். 57 காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதி மறுத்து அவற்றை நிராகரித்தனர். இதையடுத்து, ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட 621 காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதேபோல், மாடுகளைப் பிடிக்க பதிவு செய்திருந்த 623 வீரர்களுக்கு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் 6 அணிகளாக பிரிக்கப்பட்டனர். 

இதையடுத்து காலை 8 மணியளவில் போட்டியை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதும், கோயில் காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டு, வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. இதையடுத்து, ஜல்லிக்கட்டு காளைகள் களமிறக்கப்பட்டன. வாடி வாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, அங்கு கூடியிருந்த மாடுபிடி வீரர்கள் பிடித்தனர்.

ஆறு சுற்றுகளாக வீரர்கள் களமிறக்கப்பட்ட நிலையில், ஒரு சுற்றில் சிறப்பாக செயல்பட்ட வீரர், அடுத்த சுற்றில் மாடுகளை பிடிக்க அனுமதிக்கப்பட்டார். 6 சுற்றுகள் முடிவில் மொத்தம் 419 காளைகள் களமிறக்கப்பட்டன.

மாலை சுமார் 4 மணியளவில் ஜல்லிக்கட்டுப் போட்டி முடிவடைந்த நிலையில், ஆறு சுற்றுகளிலும் சிறப்பாக விளையாடிய மதுரை முடக்கத்தான் பகுதியைச் சேர்ந்த மணி முதல் பரிசை பெற்றார். அவருக்கு அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசை வழங்கினர். ஆண்டுதோறும் முதல் பரிசு வென்று வரும் முடக்கத்தான் மணி இந்த ஆண்டு தான் பெற்ற அனைத்து பரிசுகளையும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்குவதாக தெரிவித்தார். 

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறப்பாக மாடுகளைப் பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

மாடுகளைப் பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பாக மாடுகளைப் பிடித்த வீரர்களுக்கு இருசக்கர வாகனம், சைக்கிள், தங்கம் மற்றும் வெள்ளிக்காசு, பீரோ, கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன. அதேபோல், வீரர்களுக்கு போக்குகாட்டி, யாரிடமும் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது மொத்தம் 65 வீரர்கள் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டை காண வந்த 24 பேரும் காயமடைந்தனர். அவர்களுக்கு போட்டி நடைபெறும் இடத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சுகளில் இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். 

ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது ஒருவருக்கு வலிப்பு வந்ததாலும், மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டி முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செவ்வாய்கிழமை அலங்காநல்லூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைக்க இருப்பதாக தெரிவித்தார். 

மேலும், அவனியாபுரம் போன்று பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வெற்றிகரமாக நடைபெறும் என்றும் அங்கு கார்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசு மழை காத்திருப்பதாகவும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்றார். 

போதிய வெளிச்சமின்மை, பாதுகாப்பு காரணங்களுக்காக நேரத்தை நீட்டிக்க முடியவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com