பேருந்து கட்டண உயர்வை கண்டித்து 25-ஆம் தேதி பா.ம.க. போராட்டம்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டண உயர்வு என்பது  நடைமுறையில் பினாமி அரசால் அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது. புதிய பேருந்துக் கட்டணம் இன்று காலை நடைமுறைக்கு வந்த பின்னரே கட்டண உயர்வின்
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து 25-ஆம் தேதி பா.ம.க. போராட்டம்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டண உயர்வு என்பது  நடைமுறையில் பினாமி அரசால் அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது. புதிய பேருந்துக் கட்டணம் இன்று காலை நடைமுறைக்கு வந்த பின்னரே கட்டண உயர்வின் முழு அளவை தங்களால் உணர முடிந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாற்றியுள்ளனர்.

பேருந்து கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை நேற்றிரவு வெளியிட்ட தமிழக அரசு அடுத்த 4 மணி நேரத்திற்குள் நடைமுறைப்படுத்தியது நேர்மையான அணுகுமுறை அல்ல. மக்கள் கொந்தளிப்பதற்குள்  கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தி விட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் துடிப்பதிலிருந்தே அது தவறானது என்பதை புரிந்து கொள்ள முடியும். 5 ரூபாய்க்கு நலத்திட்ட உதவி அறிவிப்பதாக இருந்தால் கூட அதை தமது பெயரில் வெளியிட்டு புளங்காகிதமடைந்து கொள்ளும் முதலமைச்சர் பழனிச்சாமி பேருந்துக் கட்டண உயர்வை போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் வெளியிட்டிருப்பதில் இருந்தே  மக்களின் எதிர்ப்புக்கு பினாமி முதலமைச்சர் அஞ்சி நடுங்குவதை புரிந்து கொள்ள முடிகிறது. இப்படி ஒரு மக்கள் விரோத முடிவை ஆட்சியாளர்கள் எடுத்தது ஏன்? என்பது தான் மக்கள் எழுப்பும் வினா.

நகர்ப்புற பேருந்துகளின் குறைந்தபட்ச, அதிகபட்ச கட்டண உயர்வையும், புறநகர் பேருந்துகளின்  குறைந்தபட்ச கட்டண உயர்வின் அளவையும் மட்டுமே தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. ஆனால், உண்மையானக் கட்டண உயர்வு இன்று காலையில் தான் தெரியவந்துள்ளது. நகர மற்றும் மாநகரப் பேருந்துகளின் குறைந்தபட்சக் கட்டணம் 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதாக அரசு அறிவித்தது. இது 66% உயர்வு ஆகும். ஆனால், நடைமுறையில் பல இடங்களில் இதுவரை ரூ.3 கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கு பதிலாக ரூ.6 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது 100% உயர்வாகும். குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படும் நிறுத்தங்களின் எண்ணிக்கையை குறைத்து, கட்டணங்கள்  அதிகரிக்கப்பட்டுள்ளன. நேரடிக் கட்டண உயர்வு மட்டுமின்றி, மறைமுகக் கட்டண உயர்வையும் நடைமுறைப் படுத்தியிருப்பதிலிருந்தே அரசு மக்களை எந்த அளவுக்கு முட்டாள்களாக நினைக்கிறது என்பதை உணரலாம்.

பல இடங்களில் சாதாரண விரைவுப் பேருந்துக் கட்டணம் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களையும், தொடர்வண்டிகளின் உயர்வகுப்புக் கட்டணங்களையும் விட அதிகமாக உள்ளது. ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ஏற்கனவே அதிகமாக உள்ள நிலையில், தமிழக அரசின் கட்டண உயர்வு அறிவிப்பைப் பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்க தனியார் பேருந்து நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. தனியார் பேருந்துகள் கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகவே கட்டணம் இந்த அளவுக்கு உயர்த்தப் பட்டிருப்பதாகவும், இதற்காக தனியார் பேருந்து நிறுவனங்களிடமிருந்து  மிகப்பெரிய அளவில் கையூட்டு பெறப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. அரசின் இந்த துரோகத்தை மன்னிக்க முடியாது.

பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற நாளில் இருந்து நியாயவிலைக்கடைகளில் வழங்கப்பட்டு வந்த சர்க்கை விலை இரு மடங்காக உயர்வு, மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த உளுந்து வினியோகம் நிறுத்தம், இப்போது பேருந்துக் கட்டணம் உயர்வு என மக்களின் மீது அரசு சுமையை சுமத்திக் கொண்டே செல்கிறது. மற்றொருபுறம் மிகவும் ஏழைகளான தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு 100% ஊதிய உயர்வு வழங்கியிருக்கிறது. தமிழகத்தை ஆளும் எடப்பாடி அரசை விட மோசமான ஒரு மக்கள் விரோத அரசை வேறு எங்கும் பார்க்க முடியாது என்பது தான் உண்மை.

மத்திய, மாநில அரசுகளால் ஏற்கனவே சுமத்தப்பட்ட சுமைகளை தாங்க முடியாமல் மக்கள் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் பேருந்துக் கட்டண உயர்வு என்ற புதிய சுமையையும் தாங்க முடியாது. எனவே, பேருந்துக் கட்டண உயர்வை அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும் என்று வலியுறுத்தி  வரும் 25ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும். சென்னை உள்ளிட்ட 32 மாவட்டங்களிலும் போராட்டங்களுக்கு தலைமையேற்கும் பா.ம.க மாநில, மாவட்ட நிர்வாகிகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com