அடிக்கடி மாநில பேரவைகளுக்குத் தேர்தல் வந்தால் ஜிஎஸ்டி வரி குறையும்: ப.சிதம்பரம் கிண்டல்

அடிக்கடி மாநில பேரவைகளுக்குத் தேர்தல் வந்தால் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறையும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல்
அடிக்கடி மாநில பேரவைகளுக்குத் தேர்தல் வந்தால் ஜிஎஸ்டி வரி குறையும்: ப.சிதம்பரம் கிண்டல்


அடிக்கடி மாநில பேரவைகளுக்குத் தேர்தல் வந்தால் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறையும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார். விரைவில் 4 மாநிலங்களில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை மனதில் வைத்து 100-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது என ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

நாடு முழுவதும் சரக்கு-சேவை வரி விதிப்பு முறை கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதிலிருந்து, பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன.
 இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 28-ஆவது கூட்டம், மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நேற்று தில்லியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பொருள்களுக்கு சரக்கு-சேவை வரி விகிதம் (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பொருள்களின் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது. சானிடரி நாப்கின், கல், பளிங்கு கல், மரம் ஆகியவற்றில் செய்யப்படும் சாமி சிலைகள், சாதாரண ராக்கி கயிறுகள், துடைப்பம் செய்ய பயன்படும் கச்சா பொருள், சிறு கைவினைப் பொருள்கள், இந்திய ரிசர்வ் வங்கி அல்லது அரசு வெளியிடும் நினைவு நாணயங்கள், செறிவூட்டப்பட்ட பால் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.  

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கு சரக்கு-சேவை வரி விகிதம் (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பொருள்களின் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள பேரவைத் தேர்தலைக்கருத்தில் கொண்டு மத்திய அரசு 50 பொருட்களுக்கான வரியைக் குறைத்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களுக்கு பேரவைத் தேர்தல் வருகிறது. 2019-இல் மக்களவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதனை மனதில்கொண்டு முன்னோட்டமாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், 'அடிக்கடி பேரவைத் தேர்தல் வந்தால் போதும் ஜிஎஸ்டி வரியும் குறையும்' என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: 
தற்போது நடைமுறையில் இருக்கும் ஜிஎஸ்டி சீரமைக்கப்படாமல் இருக்கிறது. மத்திய அரசு உடனடியாக 3 வகையான வரி முறையை உடனடியாக கவனித்து அதில் அக்கறை செலுத்த வேண்டும். விரைவில் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரிக்கு நகர வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. அதுதான் உண்மையான ஜிஎஸ்டி.

இந்த ஆண்டு இறுதியில் பல மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல், 2019-இல் மக்களவைத் தேர்தல் வருகிறது. அதைக் கருத்தில் கொண்டே மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி இதுபோன்று பேரவைத் தேர்தல் நடந்தால், ஜிஎஸ்டி வரி அடிக்கடி குறைக்கப்பட்டு வரும் என நினைக்கிறேன் குறிப்பிட்டுள்ளார்.

"ஜிஎஸ்டி கவுன்சில் 100 பொருட்களின் மீதான வட்டி விகிதங்களை குறைத்து, காலாண்டு வருமானத்தை ஒப்புக்கொள்கிறது. 3 மாதங்களுக்கு ஒருமுறை ஜிஎஸ்டி ரிட்டனம் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. காலங்கடந்த ஞானம் இது. தாமதமாக நல்ல நிகழ்வுகள் நடந்துள்ளது. ஆனால், 2017 ஜூலையில் எங்களது ஆலோசனையை அரசு ஏன் கேட்கவில்லை?

மேலும், ஜிஎஸ்டி சட்டத்தில் இன்னும் பல்வேறு இடைவெளிகள், குறைகள் இருக்கின்றன. அவற்றை களைவதற்கு இந்த அரசுக்கு விருப்பம் இருக்கிறதா அல்லது திறமை இருக்கிறதா என நான் சந்தேகிக்கிறேன் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் மற்றும் பொது அறிவும் செய்யாததை குஜராத் தேர்தல் செய்ததற்கு 'நன்றி குஜராத்' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com