நிபா வைரஸ் பலி எதிரொலி: கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் பள்ளிகள் திறக்கும் தேதியை ஜூன் 12-ஆம் தேதி வரை
நிபா வைரஸ் பலி எதிரொலி: கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    
கோழிக்கோடு: கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் பள்ளிகள் திறக்கும் தேதியை ஜூன் 12-ஆம் தேதி வரை அம்மாநில அரசு ஒத்திவைத்துள்ளது. 

கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தக் காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 செவிலியர்கள் உள்பட 16-ஆக உயர்ந்துள்ளது. 

இதுதவிர, நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 1,353 பேரை தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த வைரஸ் காரணமாக மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. கேரளத்தின் பெரம்பரா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பயன்பாடின்றி பாழடைந்து கிடந்த கிணற்றில் இருந்த வெüவால்களின் மூலமாக நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக முதலில் கருதப்பட்டது.

ஆனால், வெüவால்கள் மூலம் நிபா வைரஸ் பரவவில்லை என்று மருத்துவ ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், பழந்தின்னி வெளவால்கள் மூலம் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற பரவலான கருத்து நிலவுகிறது.

இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மற்றும் கூடுதல் சுகாதாரத்துறை செயளாளர் ராஜீவ் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கோடை விடுமுறைக்கு பிறகு கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதை ஜூன் 12-ஆம் தேதி வரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அம்மாநில பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய பணியாளர் தேர்வுகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிபா காய்ச்சல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கும் தேதியை ஒத்திவைத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்தார்.

மாநிலத்தின் கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேரள மாநில சுகாதாரத்துறை மக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com