ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது!

நாமக்கல்லில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு நடத்தியதை எதிர்த்து போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது!

சென்னை: நாமக்கல்லில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு நடத்தியதை எதிர்த்து போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் இன்று காலை திடீரென ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர். 

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகன், சேகர்பாபு, ரங்கநாதன், ஆ.ராசா, மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

அப்போது மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் சட்டத்தின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டிய ஆளுநர், பாஜகவின் பிரதிநிதியாக செயல்படுவது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல. கருத்து சுதந்திரத்தையும், அறவழிப் போராட்டங்களையும் ஒடுக்க உத்தரவிடுவது ஆளுநருக்கு எந்த விதத்திலும் மதிப்பளிக்காது என்றார். 

மாநில உரிமையில் தலையீடும் ஆளுநரின் செயல்பாட்டை துவக்கம் முதலே திமுக கண்டனம் தெரிவித்து வருகிறது. ஆனாலும் ஆளுநர் தனது தவறை தொடர்ந்து செய்து வருகிறார். நேற்று நாமக்கல்லில் ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட திமுகவினர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அத்தனை பேரும் கைது செய்யப்பட்டு, இரவோடு இரவாக சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 

ஆளுநரிடம் இந்த ஆணவ போக்கு கண்டிக்கத்தக்கது. இதுவரை பொறுத்துக்கொண்டிருந்த நாங்கள், இனியும் அவர் ஆய்வை தொடர்ந்தால் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதற்காக, சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட பேரணி நடத்தினோம். கருப்புக் கொடி காண்பிப்பது ஜனநாயக நடைமுறையில் ஏற்கப்பட்டது. பிரதமராக இருந்த நேரு, இந்திரா காந்தி, அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது, கருப்பு கொடி காண்பிக்கப்பட்டது. அதற்கு அச்சப்பட்டு அவர் ஆகாய மார்க்கமாக பறந்து சென்றது உங்களுக்கெல்லாம் தெரியும். அப்போதெல்லாம் திமுகவினர் கைது செய்யப்படவில்லை. இப்போது ஆளுநர் உத்தரவின்பேரில் திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளது வேடிக்கையானது. 

ஆளுநர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், பதவிக்கு லாயக்கற்றவர் என்ற அடிப்படையில் அவர் பதவி விலக வேண்டும். ஆளுநர் ஆய்வை எதிர்த்தால் மத்திய அரசு கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதால், முதல்வரும், அவருக்கு கீழே பணியாற்றும் துணை முதல்வர் உள்ளிட்டோரும் எதிர்ப்பதில்லை. சிபிஐ வழக்குகள், வருமான வரி வழக்குகளில் சிக்கியுள்ளதால் அரசில் இருப்பவர்களுக்கு எதிர்த்து கேட்க பயப்பசுவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com