மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் கட்சிக்கு பாகிஸ்தான் அங்கீகாரம்!

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் மில்லி முஸ்லிம் லீக் (எம்எம்எல்) கட்சியை இந்த ஆண்டு பொதுத் தேர்தலில்
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் கட்சிக்கு பாகிஸ்தான் அங்கீகாரம்!

 இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் மில்லி முஸ்லிம் லீக் (எம்எம்எல்) கட்சியை இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட அங்கீகரித்து பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் நுழைந்து, கொடூர தாக்குதல்கள் நடத்தினர். இதில் 166 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் இருந்து மூளையாக செயல்பட்டு வழிநடத்தியவர், சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத். இவர்தான், லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தவா ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் நிறுவனர்.

இவர் மில்லி முஸ்லிம் லீக் (எம்.எம்.எல்.) என்ற அரசியல் கட்சியை தொடங்கியதுடன், அங்கு விரைவில் நடக்க உள்ள நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். ஆனால் பாகிஸ்தான் அரசின் எதிர்ப்பு காரணமாக, மில்லி முஸ்லிம் லீக் கட்சியை அங்கீகரித்து பதிவு செய்ய அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.

இதை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மில்லி முஸ்லிம் லீக் கட்சி தலைவர் சைபுல்லாஹ் காலித் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதி அமர் பரூக் விசாரித்தார். விசாரணையின் முடிவில், மில்லி முஸ்லிம் லீக் கட்சிக்கு அங்கீகாரம் அளிக்க மறுத்த தேர்தல் ஆணையத்தின் முடிவு நிராகரிக்கப்பட்டது.

மேலும், ஹபீஸ் சயீத் தரப்பினை கேட்டு, அவரது கட்சியை அங்கீகரித்து பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி அமர் பரூக் உத்தரவிட்டார்.

ஏற்கனவே, ஹபீஸ் சயீத்தை அடுத்த மாதம் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை கைது செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவுகளும் அவருக்கு சாதகமாக அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லாகூரில் உள்ள ஒரு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் எம்எம்எல் கட்சி சுயேட்சையாக போட்டியிட்டது. இதில் பாக்கிஸ்தான் மக்கள் கட்சி போன்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களைவிட அதிக வாக்குகளைப் பெற்றார்.

வரவிருக்கும் பொதுத் தேர்தலில் எம்எம்எல் கட்சி ஒரு முக்கிய சக்தியாக வெளிப்படும் என்று அந்த கட்சியினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், ஹஃபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்பை அண்மையில் தடை செய்த பாகிஸ்தான், அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், அந்த அமைப்பிற்கு சொந்தமான சொத்துக்களையும் முடக்கியுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சொத்துக்களும் முடக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com