காவல் ஆய்வாளர் தாக்கியதால் உயிரிழந்த உஷா கர்ப்பிணி இல்லை என வைரலாகும் மருத்துவ அறிக்கையால் பரபரப்பு..! 

ரத்தமும் சதையுமாக, தனது காதல் மனைவியின் உயிர்மூச்சு தனது கையில் கடைசியாக கரைந்து போனதாகக் கதறகினார் உயிரிழந்த உஷாவின் ராஜா.
காவல் ஆய்வாளர் தாக்கியதால் உயிரிழந்த உஷா கர்ப்பிணி இல்லை என வைரலாகும் மருத்துவ அறிக்கையால் பரபரப்பு..! 

திருச்சியில் காவல் ஆய்வாளர் உதைத்ததில் ரத்தமும் சதையுமாக, தனது காதல் மனைவியின் உயிர்மூச்சு தனது கையில் கடைசியாக கரைந்து போனதாகக் கதறிய ராஜாவின் மனைவி உயிரிழந்த உஷா கர்ப்பிணி இல்லை என வைரலாகும் பிரேதப் பரிசோதனை அறிக்கையால் பரபரப்பு எழுந்துள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை அடுத்த சூலமங்கலத்தைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்ஏ சமூகவியல் படித்தவர். கல்லூரிப் பருவத்தில் களப்பணிக்காக, திருச்சி கே.கே. நகர் பகுதியில் உள்ள சிறப்பு பள்ளிக்கு சென்றபோது அவரது காதல் மனைவி உஷா (32), இரு ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானார். நட்பு காதலாக காதலுக்கு எதிர்ப்பு வர பின் இருதரப்பும் சுமூகமாகி 2015 ஜனவரி 24 இல் உஷாவைக் கரம் பிடித்தார் ராஜா. 

வாகனக் கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனத்தில், வாராக் கடன் வசூல் பிரிவில் ராஜாவும், தனியார் பள்ளி ஆசிரியையாக உஷாவும் இல்வாழ்க்கையைத் தொடங்கினர்.  

கடந்த 8-ஆம் தேதி உஷாவின் தோழியின் திருமண நிச்சயதார்த்த விழாவுக்காக பரிசு (டேபிள் டாப் கிரைண்டர்) வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் தஞ்சாவூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்த இவர்களை, துவாக்குடியில் தலைக்கவச சோதனை என்ற பெயரில் காவல்துறை வழிமறித்தது. 

போலீஸார் வழிமறித்ததும் சாலையோரம் ஒதுங்கி வாகனத்தை நிறுத்தினேன். கோபத்துடன் வந்து முதலில் சாவியை பிடுங்கினார் போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ். பின்னர், சாவியை வாகனத்தில் வைத்தார். அப்போது, அவருடனிருந்த காவலர் ஒருவர் செல்லுமாறு சைகை கூறியதால், அங்கிருந்து புறப்பட்டார் ராஜா. ஆனால், அடுத்த விநாடியே மற்றொரு வாகனத்தில் துரத்திச் சென்ற காவல் ஆய்வாளர் காமாராஜ். கோபமாக வாக்குவாதம் செய்தபடியே ராஜாவின் மனைவி உஷாவின் மீது காலால் எட்டி உதைத்தார். இதில், நிலைதடுமாறி சாலையில் இருவரும் விழுந்தனர். 

கீழே விழுந்தவர்களுக்கு ரத்தக்காயம் ஏற்பட்டதை பார்த்து ஆய்வாளர் காமராஜ் அங்கிருந்து தப்பியோடினார். உஷாவின் காதில் இருந்து ரத்தம் வழிந்தது. மூச்சு இழுத்துக் கொண்டிருந்தது. கணவரின் ராஜாவின் கைகளிலேயே உஷாவின் உயிர் பிரிந்தது. அப்போது தான் உஷாவின் கணவர் 2 ஆவது முறை கர்ப்பமாகி 3 மாதம் என மகிழ்ச்சியாக இருந்தோம். எனது காதல் மனைவியின் கருவும், உயிரும் எனது கைகளிலேயே ரத்தமும், சதையுமாக கரைந்துபோனது என கதறி அழுதார் ராஜா.

இந்தச் சம்பவம் நாடுமுழுவதும் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. தலைக்கவசம் என்ற பெயரால் தமிழகம் முழுவதும் வாகனச் சோதனை நடத்தி காவல்துறை நடத்தி வந்த அராஜகப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உஷா மரணத்தில், மக்கள தன்னெழுச்சிப் போராட்டமாக கிளர்ந்தெழுந்தனர்.

பொதுமக்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் திருச்சி மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டார். தற்காலிக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த உஷா வழக்கில் டி.எஸ்.பி புகழேந்தி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 

உயிரிழந்த உஷாவின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர் சரவணன் என்பவரது தலைமையிலான மருத்துவக்குழு தலைமையில் பிரேதப் பரிசோதனை நடத்தியது. 

இந்நிலையில், உயிரிழந்த உஷா தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அனிதா, மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். அதில், உயிரிழந்த உஷா கர்ப்பிணி இல்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது வலதுபுற சினைப்பையில் ஒரு கட்டி இருப்பதாகவும், இடதுபுற சினைப்பையில் கரு ஏதும் இல்லாமல், இயல்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

உயிரிழந்த உஷாவின் மருத்துவ அறிக்கை குறித்து மாவட்ட எஸ்.பி. கல்யாண் கூறுகையில், ஒருவேளை, அவர் கர்ப்பமாகவே இருந்திருந்தாலும், அதனால் வழக்கு விசாரணையிலோ, பிரிவுகளிலோ எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. ஏற்கெனவே அளித்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது தேவையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தெரித்தார். 

மருத்துவ அறிக்கை குறித்து உஷாவின் கணவர் ராஜா கூறியதாவது: “குழந்தை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில்தான் தான் 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என உஷா என்னிடம் கூறினார். சந்தோஷத்தில் இருந்தோம். மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துப் பார்க்கலாம் என்றிருந்தோம். ஆனால், அதற்குள் இறந்துவிட்டார். உஷா கர்ப்பிணி இல்லை என பரிசோதனை அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறுகிறார்கள். கர்ப்பப்பையில் கட்டி இருக்க வாய்ப்பே இல்லை. என் மனைவி உயிருடன் இல்லை, சாட்சியும் இல்லை என்பதால் ஆளாளுக்கு ஏதேதோ பேசுகின்றனர். உஷாவின் உடலை மருத்துவமனையில் இருந்து எடுத்துவந்த பிறகு, வழக்கின் போக்கையே மாற்றிவிட்டனர். போலீஸாரிடம் அதிகாரம் இருக்கு என்பதால் எதையும் இட்டுக்கட்டி பேசுவார்கள். அவர்களால் என் உஷாவை திருப்பித் தரமுடியுமா என்றார் ராஜா.

கர்ப்பிணி உஷா உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறையின் ஈரல் மட்டும் கெட்டுப்போகவில்லை. ஒட்டுமொத்த உடலும் அழுகி துர்நாற்றமெடுத்துள்ளது அன்றே மக்கள் கொதித்தனர்

சம்பவம் நடந்த அன்று “உஷா மற்றும் ராஜா துவாக்குடி அரசு மருத்துவமனையில்தான் அனுமதிப்பட்டபோது ராஜா அதிக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தாரே தவிர அவர், குடிபோதையில் இல்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உஷா கர்ப்பமாக இருந்தார் என்று எங்களிடம் கூறவில்லை என்று போலீஸார் தெரிவித்திருந்த நிலையில்தான் இப்படி ஒரு பரிசோதனை அறிக்கை வெளியே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com