நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்: வழக்கு விசாரணை ஜூலை 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அரியவகை மான்களை வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஹிந்தி நடிகர் சல்மான் கான் இன்று மீண்டும்
நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்: வழக்கு விசாரணை ஜூலை 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஜோத்பூர்: அரியவகை மான்களை வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஹிந்தி நடிகர் சல்மான் கான் இன்று மீண்டும் ஜோத்புர் நீதிமன்றத்தில் ஆஜரானார். 

ஜோத்பூர் அருகே கன்கானி கிராமத்தில் நடைபெற்ற ஹிந்தி படமொன்றின் படப்பிடிப்புக்கு கடந்த 1998ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்றிருந்தபோது அரியவகை இனத்தைச் சேர்ந்த 2 மான்களை வேட்டையாடியதாக சல்மான் கான், சைஃப் அலிகான், தபு, நீலம், சோனாலி பிந்த்ரே, உள்ளுர்வாசி துஷ்யந்த் சிங் உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

ஜோத்பூர் கீழமை நீதிமன்றத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகாலம் இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். பலதரப்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்தச் சூழலில், கடந்த மாதம் 28-ஆம் தேதி வழக்கின் மீதான இறுதி வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன. அதைக் கேட்டறிந்த நீதிபதி தேவ் குமார் கத்ரி, ஏப்ரல் 5-ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக அறிவித்தார்.

அதன்படி, வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பின் விவரங்களை அறிவதற்காக சல்மான் கான் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். குற்றம்சாட்டப்பட்ட பிற நட்சத்திரங்களும் ஆஜராகியிருந்தனர். வழக்கின் வாத, பிரதிவாதங்களும், சாட்சியங்களும் சல்மான் கான் மான் வேட்டையில் ஈடுபட்டதை உறுதி செய்திருப்பதாகத் தெரிவித்த நீதிபதி, அவரைக் குற்றவாளி என அறிவித்தார்.

வனஉயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஜோத்பூர் மத்திய சிறையில் சல்மான் கான் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஹிந்தி திரையுலக நட்சத்திரங்கள் சைஃப் அலிகான், தபு, நீலம், சோனாலி பிந்த்ரே ஆகியோரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக்கி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதிபதி விளக்கமளித்தார்.

இதையடுத்து, சல்மான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டு ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சல்மான் கான் சார்பில் ஜோத்பூரில் உள்ள மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 5 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, ஜோத்பூர் மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது நீதிபதி ரவீந்திர குமார் ஜோஷி, வழக்குத் தொடர்பாக விசாரணை நீதிமன்றத்திடம் இருக்கும் கோப்பு விவரங்களை தாக்கல் செய்ய கோரினார். இதைத் தொடர்ந்து, சல்மான் கான் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருக்கும் மனு மீது சனிக்கிழமை முடிவு செய்யப்படும் என்று நீதிபதி ஜோஷி அறிவித்தார்.

அதன்படி, சல்மான் கான் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனு, ஜோத்பூர் மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் சனிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சல்மான் கான் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி கூறுகையில், "ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பிரமாண உறுதிப் பத்திரம், அதே மதிப்புக்கு 2 உறுதி பத்திரங்கள் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், சல்மான் கானுக்கு ஜாமீன் அளிக்கப்படுகிறது. மே மாதம் 7-ஆம் தேதியன்று சல்மான் கானின் மனு மீண்டும் விசாரிக்கப்படும். அப்போது அவர் நேரில் ஆஜராக வேண்டும்' என்றார்.

முன்னதாக, 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சல்மான் கான், ஜோத்பூர் மத்திய சிறையில் 2 நாள்களாக அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஜோத்பூர் மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் அளித்ததையடுத்து, அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே, சல்மான் கான் தரப்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி ஜோஷி, சிரோஹிக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிக்கையை அந்த மாநில அரசு வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிக்கையில், ஜோஷியுடன் சேர்த்து 134 நீதிபதிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரண்டு நாட்கள் சிறையில் கழித்த பின் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த சல்மான் கான், இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.   ரேஸ் 3  படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட சல்மான் கான் தமது காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டு ஜோத்பூர் நீதிமன்றம் வந்தார். 

சல்மான்கான் வருகையையொட்டி நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

இந்த மனு மீதான விசாரணையின் போது, அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து விசாரணையை ஜூலை மாதம் 17-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com