புழல் சிறை ஆய்வாளரை தாக்க கைதிகள் திட்டம்: உளவுத்துறை அதிர்ச்சி தகவல்

சென்னை புழல் சிறையில் பணிபுரியும் ஆய்வாளரை தாக்க, கைதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது.
புழல் சிறை ஆய்வாளரை தாக்க கைதிகள் திட்டம்: உளவுத்துறை அதிர்ச்சி தகவல்


சென்னை புழல் சிறையில் பணிபுரியும் ஆய்வாளரை தாக்க, கைதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது.

புழல் மத்திய சிறையில் நடைபெறும் அத்துமீறல்கள் குறித்தும், சில அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட சில கைதிகளுக்கு சொகுசாக வாழ்வதற்கு வசதிகள் செய்து கொடுப்பது குறித்தும் புகைப்படங்களுடன் தினமணி நாளிதழில் செய்தி வெளியானது.

 இச்செய்திக்கு பின்னர், புழல் சிறையில் 5 முறை சோதனை நடத்தப்பட்டு, டி.வி.க்கள், மிக்ஸி, பீடி, வெளிநாட்டு சிகரெட், செல்லிடப்பேசிகள் ஆகியவை தொடர்ச்சியாக பறிமுதல் செய்யப்பட்டு வந்தன. மேலும் சிறைத்துறை அதிகாரிகள், காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

 இந்நிலையில் புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனைக் கைதிகள் பிரிவில் கண்காணிப்பாளர் எம்.செந்தில்குமார் தலைமையில் காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனை செய்தனர். இச்சோதனை காலை 11.15 மணியளவில் தொடங்கி பகல் 1.45 மணி வரை நடைபெற்றது.

 இதில் 13 அரிசி மூட்டைகள், 11 பிரியாணி அரிசி மூட்டைகள், 17 லிட்டர் சமையல் எண்ணெய், மசாலா தூள் பாக்கெட்டுகள் 4 கிலோ, சீரகம், கடுகு, மிளகு ஆகியவை 4 கிலோ, வேர்க்கடலை 10 கிலோ, இஞ்சி 3 கிலோ, பூண்டு 7 கிலோ, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவை ஒரு கிலோ, ஒரு கிலோ இலங்கை டீத்தூள், 6 கிலோ பால்பவுடர், இட்லி பாத்திரம் 4, புட்டு பாத்திரம் 2, பிரியாணி அண்டா 7, கடாய் 4, காய்கறி வெட்டும் கத்தி 5, கத்திரிக்கோல் 3 ஆகியவற்றை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

 இந்த சோதனையின் காரணமாக, சிறைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இச் சோதனைக்காக சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில், சொகுசு வாழ்க்கை குறித்த புகைப்படங்கள் வெளியானதற்கு, சிறையில் உள்ள அதிகாரிகள் தான் காரணம் என முடிவு செய்த கைதிகள், அவர்களை தாக்க திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது. 

தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், போலீஸ் பக்ருதீன் என்ற கைதி, புழல் சிறையில் விஜிலென்ஸ் ஆய்வாளராக பணிபுரியும் சுப்பையா என்பவரை தாக்க திட்டம் தீட்டியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்காக, சிறைத்துறை டிஐஜி முருகனின் வீட்டில் பணியாற்றும் கைதி ஒருவருடனும், ஆய்வாளர் சுப்பையாவின் ஒட்டுநருடனும், போலீஸ் பக்ரூதீன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com