திராவிட மொழிகளின் தாயகம் தமிழ் மொழி: முதல்வர் பழனிசாமி பேச்சு

இயற்கை கொடைகளான மிகை நீரையும், மிகை மின்சாரத்தையும், விளையும் உணவுப் பொருட்களையும் மாநிலங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ள வேண்டும்
திராவிட மொழிகளின் தாயகம் தமிழ் மொழி: முதல்வர் பழனிசாமி பேச்சு


சென்னை: திராவிடத்தின் தாய்மொழியாக விளங்குவது தமிழ் மொழிதான்; மொழியை காத்த ஆட்சியாளர்கள்தான் மக்களால் போற்றப்படுவார்கள் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற செயின்ட் பீட்டர்ஸ் உயர்கல்வி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் திராவிட இயல் ஆய்வியல் நிறுவனத் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசினார். 

அப்போது, ''இனமும், மொழியும் காக்கப்படுவதற்காக அண்ணா ஆற்றிய அரும்பணிகளைப் பற்றிய ஆய்வுகளை திராவிட இயல் ஆய்வு நிறுவனம் மேற்கொள்ள வேண்டும். அண்ணாவின் பொதுவாழ்வுக் காலத்தில், இளம் சமூகத்தினரிடம் இருந்த இனப்பற்றும், மொழிப்பற்றும் இன்றைக்கும் நிலவிட வேண்டும்.

திராவிடத்தின் தாய்மொழியாக விளங்குவது தமிழ் மொழிதான்; மொழியை காத்த ஆட்சியாளர்கள்தான் மக்களால் போற்றப்படுவார்கள். தென்னிந்தியாவின் மற்ற திராவிட மொழிகளின் இலக்கியங்கள் கி.பி.8 -ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் தோன்றியிருக்கிறது. ஆனால் தமிழ் இலக்கியத்திற்கு 30 நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட ஆதார வளம் உள்ளது. அத்தகைய பழமையும், வளமையும் கொண்ட மொழி தமிழ் மொழி. தமிழ் மொழி மிகவும் மூத்த மொழி, முதன்மையான மொழி. எந்த மொழி கொண்டும் இயங்காத மொழியாக தமிழ் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மொழி மட்டும் இல்லாமல் திராவிட கலை, வேதங்களும் பழமையானது. மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியவை தமிழ் மொழியில் இருந்து திரிந்தவை என்பதுதான் ஆய்வாளர்கள் முடிவு.

ரிக் வேதத்திலேயே, திராவிட மொழிகளிலிருந்து பல சொற்கள் எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளன. இதிலிருந்து திராவிட மொழிகளின் தொன்மையும், பெருமையும் புலப்படுகிறது.

மேலும், உலகில் மிகவும் பழமையான நாகரிகமாகக் கருதப்படும் சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் எனக் குறிப்பிட்ட முதல்வர், திராவிடர்களாகிய நாம் மொழியாலும், பண்பாட்டாலும், உணர்வாலும் ஒன்றுபட்டுள்ளோம்.

திராவிட மொழிகளில் திருந்திய மொழிகளாக அறியப்பட்ட 6 மொழிகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகள் பெருமொழிகள் என அழைக்கப்பட்டன.

சிந்து சமவெளி நாகரிகம், மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் ஆகியவற்றை ஏற்படுத்தி, சிந்து, பஞ்சாப் பள்ளத்தாக்குகளில் திராவிடர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தார்கள் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

நமது திராவிட மாநிலங்கள் மொழியில் மட்டும் ஒற்றுமையாக இல்லாமல், இயற்கை கொடைகளான மிகை நீரையும், மிகை மின்சாரத்தையும், விளையும் உணவுப் பொருட்களையும் மாநிலங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே உண்மையான திராவிடத்திற்கு அடையாளம் என வலியுறுத்திய முதல்வர், தென்னக நதிகள் இணைப்புகளுக்கு தமிழகம் முழு ஒத்துழைப்பை அளித்து வருவதாகவும் கூறினார்.

திராவிட இயல் ஆய்வு நிறுவனம், திராவிடக் கலாச்சாரம், பண்பாடு, மொழியின் வளம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை இளைய தலைமுறையினரிடையே ஏற்படுத்த வேண்டும். அதற்காக அண்ணாவின் படைப்புகள் மற்றும் பெரியாரின் சமூக நீதிச் சிந்தனைகளை மாணவர்களிடையே பரப்ப வேண்டும் என கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com