சஞ்சீவினி மூலிகை நிஜமா? இல்லையா? இதோ இன்னொரு சாட்சி!

இந்தியர்களிடையே ஹனுமன் என்ற பெயரும் அவரது தேடுதலான சஞ்சீவினி மூலிகையும் ஆழ்மனதில் ஊறிப் போன நம்பிக்கைகள்.
சஞ்சீவினி மூலிகை நிஜமா? இல்லையா? இதோ இன்னொரு சாட்சி!

இன்று வரை ஹனுமன் தேடிக் கொண்டுவந்த சஞ்சீவினி மூலிகை பற்றி பல்வேறு சர்ச்சைகள் உலவினாலும், இந்தியாவில் ஹனுமனுக்கும், சஞ்சீவினி மூலிகைக்குமான மவுசு மட்டும் எப்போதுமே குறைந்தபாடில்லை. ஓரிரு மாதங்களுக்கு முன்புகூட உத்தரகாண்ட் உள்துறை அமைச்சர், ஹனுமன் தேடிய சஞ்சீவினி மூலிகையை இப்போது இமயமலைச் சாரலில் தேடிக் கண்டுபிடிப்பதற்காக அரசு சார்பில் ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவித்து அன்றைய பரபரப்புச் செய்தியாக்கினார்.

நிஜமாகவே சஞ்சீவினி மூலிகை என்ற ஒரு விசயம் இந்த உலகில் இருந்ததா? எத்தனை முயற்சி செய்தாலும் இனிமேல் அதைக் கண்டுபிடிக்க முடியுமா? என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், ஆனால் இந்தியர்களிடையே ஹனுமன் என்ற பெயரும் அவரது தேடுதலான சஞ்சீவினி மூலிகையும் ஆழ்மனதில் ஊறிப்போன நம்பிக்கைகளாகிவிட்டன என்பதை மறுக்க முடியாது. இதோ சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக்கில் இருக்கும் இந்த ஹனுமன் ஆலயம் அதற்கு மற்றுமோர் அத்தாட்சி. உலகின் மூன்றாவது மிகப்பெரிய சிகரமான 'கஞ்சன்ஜங்காவை’ இந்தக் கோயிலின் முகப்பில் நின்றுகொண்டு பார்த்து ரசிப்பது தெவிட்டாத காட்சி இன்பம். 

முன்பெல்லாம் சீஸன் நாட்களில் மட்டும்தான் இக்கோயிலில் மக்கள் நடமாட்டத்தைப் பார்க்க முடியும். இப்போது அப்படியல்ல, சாதாரண நாட்களிலும் மக்கள் தரிசனத்துக்காக வந்து இமயத்தின் அழகை ரசித்துச் செல்கிறார்கள். இந்தக் கோயிலில் இருந்து பார்க்கும்போது இமயமலைச்சாரலின் எழில் 360 டிகிரி வியூவில் வெள்ளிப்பாலங்களாக அப்படியே நெஞ்சை அள்ளிக்கொள்கிறது. மேக மூட்டம் இல்லாத நாட்களில் தொலைவிலிருக்கும் கஞ்சன்ஜங்கா கண்ணாடித் தெளிவில் கையெட்டும் தொலைவில் கண்ணுக்கு விருந்தாகும். இங்கு வருகை தரும் பக்தர்களில் பெரும்பாலோனோர் டூரிஸ்டுகள் என்பதால் மலையழகை ரசிப்பதோடு ஹனுமனையும் தரிசித்து விட்டுச் செல்வது வழக்கம். 

மத நல்லிணக்கம்:

தரையிலிருந்து சுமார் 7,200 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோயில் இந்திய ராணுவத்தால் நிர்வகிக்கப்படுவதால் ராணுவ வீரர்களே பூசாரிகளாகவும் மாறி விடுகிறார்கள். மத வேறுபாடுகளே இல்லாமல் கிறிஸ்துவர், முஸ்லீம் என யார் வேண்டுமானாலும் இங்கு பூசாரிகளாகிப் பூஜை செய்யலாம். அதே போல அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் இங்கு பிரார்த்தனை செய்ய அனுமதி உண்டு. இப்போது இந்தக் கோயிலின் பூசாரியாகச் செயல்படுவது சஜின் குமார் எனும் கிறிஸ்துவர். இவருக்கு முன் முஸ்லிம் ஒருவர் பூசாரியாக இருந்தாராம். பூசாரி என்றதும் வழக்கமான காவி வேஷ்டி பூசாரிகளைக் கற்பனை செய்து விடாதீர்கள். இங்கு ராணுவப் பூசாரிகள் ராணுவ உடையில் ஹனுமனுக்குப் பூஜை செய்து பக்தர்களுக்கு சிந்தூரம், துளசி தீர்த்தம், ஹனுமனுக்கு உகந்த செந்நிற பூக்கள் எனப் பிரசாதமும் வழங்குகின்றனர். இந்தியாவில், குறிப்பாக எல்லைப்பகுதிகளில் மக்களிடையே மதநல்லிணக்கம் நிலவுவதை விவரிக்க இதை விடச் சிறந்த உதாரணம் தேவையில்லை.

கோயிலின் ஸ்தல வரலாறு:

கோயிலுக்கு வருவோர் அறிந்து கொள்வதற்காக கோயிலின் ஸ்தல வரலாறு கருங்கல் பலகையில் தங்க நிற எழுத்துக்களில் செதுக்கப்பட்டு கோயில் முகப்பில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதிலிருக்கும் தகவலின் படி இந்தக் கோயில் ராமாயண காலத்துடன் தொடர்புபடுத்தப் படுகிறது. அதாவது ராம, ராவண யுத்தத்தில் கடுமையாகக் காயமடைந்து மூர்ச்சையான லட்சுமணன் மற்றும் வானரப் படையினரைக் காப்பதற்காகத் தான் ஹனுமன் சஞ்சீவினி மூலிகை தேடிக் கண்டடைகிறார். இமயமலைச் சாரலில் ஹனுமன் சஞ்சீவினி கண்டு பிடித்து எடுத்துக் கொண்டு திரும்பும் வழியில் சிக்கிமின் இந்த மலையுச்சியில் தான் சற்று நேரம் இளைப்பாறினாராம். (பின்னே இமயச் சாரலில் இருந்து இலங்கை ரொம்பத் தொலைவு தான் இல்லையா?!) இங்கே கோயில் வருவதற்கு முன்பு மக்கள் கருங்கல்லில் ஹனுமன் சிலையை வழிபட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள் 1950 வருடத்திற்குப் பிறகு தான் தற்போது பயன்பாட்டில் உள்ள இந்தக் கோயில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. கோயிலில் இப்போதிருக்கும் ஹனுமன் செந்நிற சிந்தூரப் பிரியர்.

சர்வதேச எல்லைக் கோடு:

’ஹனுமன் டோக்’ அமைந்திருக்கும் இந்த கேங்டாக் பகுதி வடக்கில் சீனாவையும், மேற்கில் நேபாளத்தையும், கிழக்கில் பூடானையும் பிரிக்கும் எல்லையாகவும் அமைவதால் இங்கு சதா சர்வ காலமும்  பல நாட்டு ராணுவத் துருப்புகளின் நடமாட்டம் அதிகமிருக்கும். அவர்களால் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் எந்த விதப் பிரச்சினைகளும் இது வரை வந்ததில்லை என்பதால் இங்கு வருகை தரும் டூரிஸ்டுகளின் எண்ணிக்கை குறைவதில்லை. வருடந்தோறும் இங்கு வருகை தரும் பன்னாட்டு டூரிஸ்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது அதற்கான அத்தாட்சி.
 

அட்ரஸ்: ஹனுமன் டோக், கேங்டாக், சிக்கிம் -  737103

தொடர்புக்கு: 094334 59398

கோயில் திறந்திருக்கும் நேரம்: வாரத்தில் எல்லா நாட்களிலும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com