பிரிந்து வாழும் தம்பதியினரில் பெற்றோரின் அன்பைப் பெற குழந்தைகளுக்கு பூரண உரிமை உண்டு: டெல்லி உயர்நீதிமன்றம்

ஒரு குழந்தைக்கு தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கவிடாமல் செய்வது என்பது குழந்தையின் நலனுக்கு உகந்ததல்ல
பிரிந்து வாழும் தம்பதியினரில் பெற்றோரின் அன்பைப் பெற குழந்தைகளுக்கு பூரண உரிமை உண்டு: டெல்லி உயர்நீதிமன்றம்

ஒவ்வொரு குழந்தைக்கும் தங்கள் பெற்றோரின் அன்பையும், அரவணைப்பையும் பெறுவதற்கு உரிமை உண்டு என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் ஒரு தம்பதியரின் ஆண் குழந்தை இந்தியாவில் தாயுடன் வசித்து வருகிறது. தந்தை ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வசித்து வருகிறார். அவர் இந்தியா வரும்போது தன் குழந்தையைச் சந்திப்பதும், அதனுடன் ஓரிரவு தங்கியிருப்பதும் வழக்கம். இதனிடையே, குழந்தையின் தாயார் தொடர்ந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் குழந்தையை அதன் தந்தை சந்திப்பதற்குத் தடை விதித்தது. இதை எதிர்த்து குழந்தையின் தந்தை தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரதீப் நந்திராஜோக் மற்றும் யோகேஷ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது:
ஒரு குழந்தைக்கு தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கவிடாமல் செய்வது என்பது குழந்தையின் நலனுக்கு உகந்ததல்ல. குழந்தையைத் தன் வசம் வைத்திருக்கும் பெற்றோரில் ஒருவர், கருத்து வேறுபாடு ஏற்பட்ட தனது வாழ்க்கைத் துணையிடம் இருந்து அந்தக் குழந்தையை பிரிக்க முனைகிறார் என்று வைத்துக் கொள்வோம். அது சம்பந்தப்பட்ட குழந்தையின் வாழ்க்கையின் பிற்பகுதியில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது
என்பதை அவர் உணர்வதில்லை.
பெற்றோராகிய தாய், தந்தை ஆகிய இருவரின் அன்பையும், அரவணைப்பையும் பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமையாகும். பெற்றோரில் ஒருவரிடம் குழந்தை இருக்கும்பட்சத்தில் மற்றவர் வந்து அவ்வப்போது பார்த்துச் செல்வதில் சுமுக உடன்பாடு ஏற்படுத்த நீதிமன்றம் மேற்கொள்ளும் முயற்சி தோல்வியடையும்பட்சத்தில் நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டியுள்ளது. குழந்தையின் நலனைக் கருத்தில்கொண்டு இதைச் செய்ய வேண்டியுள்ளது.
இந்த வழக்கைப் பொறுத்தவரை, தாய் தன் மகனுடன் இந்தியாவில் வசித்து வருகிறார். தந்தை கென்யாவில் வசித்து வருகிறார். அவர் இந்தியா வரும்போது தன் மகனைச் சந்திக்கவும், மகனுடன் தங்கியிருக்கவும் நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.
தந்தை வந்து தன்னைச் சந்திப்பதை அந்தக் குழந்தையும் எதிர்ப்பதில்லை. மாறாக தன் தந்தையையும், தந்தை வழி பாட்டி, தாத்தாவையும் சந்திப்பதில் அவன் மகிழ்ச்சியே அடைகிறான்.
எனவே பிரிந்து வாழும் பெற்றோர் தங்கள் குழந்தைகளைச் சந்திப்பது தவிர, அதனுடன் அவ்வப்போது தங்குவதையும் ஊக்கவிக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைக்கு அன்பும் அரவணைப்பும் கிடைப்பதோடும் தாத்தா, பாட்டி, மாமன், அத்தை போன்ற உறவினர்களிடம் நெருக்கமும் ஏற்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com